ரியாத் : சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடையுள்ள நிலையில், கார் ஓட்டிச் சென்ற ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளது. சட்ட ரீதியான தடையில்லை என்றாலும், மத ரீதியான வாய்மொழி உத்தரவாக அமலில் உள்ளது. 1960ல், சவுதி அரேபியாவில் பெண்கள் கல்வியில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதனால், தற்போது அந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் 58 சதவீதம் பெண்கள் கல்வி கற்கின்றனர். ஆனாலும், பணியிடங்களில் வெறும் 15 சதவீதம் பெண்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.பெண்களை பெரியளவில் பணியில் சேர்க்கும்படி, அந்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசு உத்தவிட்டு வருகிறது.
சவுதியில், பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவு என்பதால், அரசு சார்பில் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படுவது இல்லை. அனைவரும் கார் வைத்திருக்கின்றனர். ஆனால், பெண்கள் கார் ஓட்டக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதால், இவர்கள் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு முக்கிய வேலைகளுக்காக வெளியே செல்லும் போது, வீட்டில் ஆண்களை அல்லது டிரைவர்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.
இதுபோன்ற காரணங்களால், வீட்டில் ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி டிரைவர்களின் சம்பளமாக சென்று விடுகிறது.சவுதி மன்னர் அப்துல்லா, "பெண்கள் கார் ஓட்டுவது சமுதாயம் சார்ந்த விஷயம். இந்த விஷயத்தில் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறிவிட்டார். இந்நிலையில், 1990ல், ரியாத்தில் கார் ஓட்டிச் சென்ற 47 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தங்களது வேலையை இழந்தனர்.
நாட்டில் இருந்து வெளியேற இவர்களுக்கும், இவர்களது கணவர்களுக்கும் ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக கார் ஓட்டுவதற்கு அனுமதி கோரி, அந்நாட்டின் பெண் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனாலும், மாற்றம் நிகழவில்லை.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி, ரியாத்தில், 40 பெண்கள் துணிந்து கார் ஓட்டினர். கணவர்களை காரில் அமர வைத்து கடைகளுக்கு "ஷாப்பிங்' சென்றனர். இதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரவேற்றிருந்தார்.
கடந்த இரு வாரங்களாக கார் ஓட்டி வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் கார் ஓட்டிய ஐந்து பெண்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பெண் உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment