Thursday, 4 July 2013

இஷ்ரத் உள்ளிட்ட நால்வரின் என்கவுண்டர் போலியானது! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 அப்பாவிகள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பது அம்மாநில போலீசாரும் ஐ.பி யும் இணைந்து நடத்திய ‘போலி என்கவுன்ட்டர்’ நடவடிக்கை என்று சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகள் என்று மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான், கேரளாவின் ஜாவேத் உட்பட 4 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சிபிஐ விசாரணையில் மத்திய உளவுத்துறை (ஐ.பி) அதிகாரி ராஜேந்திர குமாருக்கும் இந்த என்கவுன்ட்டரில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜூலை 4 க்கு முன்பாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், அகமதாபாத் புறநகரில் குஜராத் போலீசார் 4 பேரை சுட்டுக் கொன்றது போலி என்கவுன்ட்டர். இந்த போலி என்கவுன்ட்டரை குஜராத் போலீசாரும் மத்திய புலனாய்வு அமைப்பான ஐபியும் இணைந்து மேற்கொண்டது. குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகளான பாண்டே உள்ளிட்டோர் இந்த போலி என்கவுன்ட்டர் சம்பவத்துக்குக் காரணமாகும். ஐபி அமைப்பு அதிகாரி ராஜேந்திரகுமாரின் பங்கு குறித்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக புகார் கூறப்பட்ட கருப்பு தாடியான குஜராத் முன்னாள் அமைச்சர் அமித்ஷாவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.

No comments:

Post a Comment