Tuesday, 1 November 2011

பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

பாலஸ்தீன அதிகாரத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது.



பாலஸ்தீனம் ஆதரவாக பெருமளவு 
வாக்குகள் வித்தியாசத்தில் யுனெஸ்கோ 
மன்றம் வாக்களித்தது.


 பாலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன.
ஆனாலும், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பாலஸ்தீனர்கள் எடுத்துவருகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக தற்போது அவர்கள் யுனெஸ்கோவில் இணைந்துள்ளனர்.

ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பாலஸ்தீன நிர்வாகம் சென்ற மாதம் விண்ணப்பித்துள்ளனர்.
அமெரிக்க விருப்பத்தை மீறி பாலஸ்தீனத்தை யுனெஸ்கோ சேர்த்துக்கொண்டுள்ளதால், யுனெஸ்கோவுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியில் ஏழு கோடி டாலர்களை அது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கச் சட்டம் ஒன்று சொல்கிறது.

இத்தொகை யுனெஸ்கோவுடைய மொத்த நிதியில் பாதிக்கும் அதிகம் ஆகும்.

இஸ்ரேல் எதிர்ப்பு

யுனெஸ்கோவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்புகளை பாதிக்கும் என்று இஸ்ரேல் கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த வாக்கெடுப்பானது, சர்வதேச சமுதாயம் அமைதி வழிமுறையை முன்னுக்கு கொண்டுசெல்ல எடுக்கும் முயற்சிகளை நிராகரிப்பதற்கு ஒப்பானது என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் கூறியது

No comments:

Post a Comment