Saturday 20 August 2011

சிரியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா


சிரிய அதிபர் பஷீர் அல் ஆசாத் பதவி விலக வேண்டுமென கோரி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள்
மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அமெரிக்கா சிரியா மீது பொருளாதார தடை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் அமெரிக்க அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் உள்ள சிரிய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஆசாத் தலைமையிலான அரசுடன் அமெரிக்க நிறுவனங்களோ அல்லது தனிநபர்களோ வர்த்தக தொடர்புகளை பேணக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பெட்ரோல் இறக்குமதிக்கும்  தடை விதித்துள்ளது.

மேலும், சிரியாவுக்கு எதிரான அழுத்தத்தை இந்தியா, கத்தார், பக்ரைன், எகிப்து, ரஷ்யா,பிரேசில்,பிரான்ஸ்,ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கொடுக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை சுமார் 2 ஆயிரம் பொதுமக்களை சிரிய இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது. இதனை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர் கூறினார். இதேவேளை சிரிய நிலைமைகளை கண்காணிப்பதற்காக ஐ.நாவின் சிறப்பு படையினர் இன்று சிரியாவுக்கு செல்கின்றனர்.

முன்னதாக கடந்த 40 ஆண்டுகளாக பதவியிலிருக்கும் அரச குடும்பத்தினர் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டுமெனவும், சிரிய அதிபர் பஷீர் அல் ஆசாத் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அதிபர் பஷீர் அல் ஆசாத்துக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போராட்டங்களின் போது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment