Tuesday, 9 August 2011

லண்டனில் மூன்றாம் நாள் தொடரும் கலவரம் - எரிந்து சாம்பலாகும் கடைத்தெருக்கள்

லண்டனில் நேற்று மூன்றாவது நாளாக முக்கிய நகரங்களில் கலவரம் தொடர்ந்து வருகிறது.

கடந்த வாரம், டாட்டன்ஹாம் நகரை சேர்ந்த மார்க் டக்கன் என்பவரை வீதியில் மறித்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய போது ஏற்பட்ட முறுகல் நிலையினால் அவர் மீது போலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.  ஆயுத கடத்தல் செய்வதாக சந்தேகித்தே அவரை விசாரிப்பதற்கு பொலிஸார் அணுகியுள்ளனர்.


எனினும் அவர் ஒரு கறுப்பினத்தவர் என்பதை காரணம் காட்டியே இவ்விசாரணையை பொலிஸார் மேற்கொள்ள முற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்படுகொலை சம்பவத்தை தொடர்ந்து அவரது தந்தை மகனின்  படுகொலைக்கு நியாயம் கேட்டு, அந்நகர வாசிகளை  ஒன்றிணைந்து காவற்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டார்.

டாட்டன்ஹாமில் காவற்துறை நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்ட காரர்கள், அத்தெருவில் வாகனங்கள், நகை கட்டிடங்கள் என்பவற்றிற்கும் தீவைத்து கொளுத்தினர். போலிஸாரின் வாகனங்களும் எரிக்கப்பட்டன.

இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். டாட்டன்ஹாமில் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் பரவலாக நடைபெற்ற இவ்வன்முறைகளை அடக்குவதற்கு பொலிஸார் கடும் சிரத்தை எடுக்க வேண்டியதாயிற்று. இதில் 26 காவற்துறையினர் படுகாயமடைந்தனர்.


இச்சம்பவம் நடைபெற்று தொடர்ச்சியாக இரு நாட்களில்,  பிரிமிங்ஹாமில் இதே போன்று கடைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. குரொய்டோனில் மாபெரும் கடைத்தொகுதி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இத்தீயை அணைப்பதற்கு நேற்றிரவு முழுவதும் தீயணைப்பு படையினர் கடும் போராட்டம் நடத்தினர்.

கிழக்கு லண்டனில் ஹேக்னி நகரில் இளைஞர் குழுவினர் போலீஸார் கார், மற்றும் கடைத்தெருக்களை அடித்து நொறுக்கும் கலவர காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதே போன்று தெற்கு லண்டனின் லெவிஷாம், மத்தியில் பெக்காம், ஆகிய பிரதேசங்களிலும் போலீஸாரின் வாகனங்கள், தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. முகமூடி அணிந்தவாறு வரும் இளைஞர்களே காரணமின்றி இச்செயலை செய்வதாக காவற்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதையடுத்து விடுமுறைக்காக இத்தாலி சென்றிருந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் உடனடியாக நாடு திரும்பினார். காவற்துறை உயர் அதிகாரி, மற்றும் உள்துறை பாதுகாப்பு அமைச்சருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

 பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவழி இணையத்தளங்களின் உதவியுடன் மிக இரகசியமாக தம்மை தொடர்பு படுத்திக்கொள்ளும் இளைஞர்கள் அடுத்து கலவரத்தை எங்கு நடத்துவது என மிகவேகமாக தகவல் பரப்பி வருவதாகவும், இதனாலேயே காவற்துறையினரால் இவர்கள் எங்கு எந்நேரத்தில் வந்து இவ்வன்முறை செயல்களில் ஈடுபடுகிறார்கள் என கட்டுப்படுத்த முடியாது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல கடைகளில் கொள்ளையடித்த இளைஞர்கள் 13,14 வயதுடையவர்களாக இருப்பதால்  அவர்களது எதிர்காலம் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இக்குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள் என காவற்துறை எச்சரித்துள்ளது. எனினும் இக்கலவரங்களுக்கு இளைஞர்களிடையே ஆதரவு போக்கு அதிகரித்துள்ளதால், மேலும் கலவரம் பெரிதாக வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனால் சர்வதேச கவனமும் லண்டன் பக்கம் திரும்பியுள்ளது. இன்னமும் ஒரு வருடத்திற்குள் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் உள்ளூர்க் கலவரங்கள் லண்டன் சென்று வரும் சுற்றுலா பயணிகளிடம் மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளன.

No comments:

Post a Comment