டெல்லி : சொராபுதீன் போலி எண்கவுண்டர் வழக்கில் சிபிஐ சார்பில் ஆஜராகி
வாதாடி வந்த மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துல்சியை அதிலிருந்து விலகுமாறு
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் விலகிக் கொண்டார்.
2005ம் ஆண்டு சொராபுதீனும் அவரது மனைவி கெளசர் பீயும் குஜராத்-ராஜஸ்தான் போலீசாரால் போலி எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சொராபுதீனுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் தொடர்பு உள்ளதாக குஜராத் போலீசார் குற்றம் சாட்டினர்.
ஆனால், இதில் உண்மையில்லை என்று விசாரணை அறிக்கை தெரியவித்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்தக் கொலைகளில் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
2007ம் ஆண்டு இந்த வழக்கில் குஜராத் அரசுக்காக ஆஜராகி வாதாடி வந்தார் துல்சி. ஆனால், 2009ம் ஆண்டு சிபிஐ அவரை தனது வழக்கறிஞராக நியமித்தது.
ஒரே வழக்கில் இரு தரப்புக்கும் மாறி மாறி துல்சி ஆஜராகி வாதாடி வந்தது பல தரப்பின் கண்டனத்துக்கும் உள்ளானது.
இந் நிலையில் அவரை சிபிஐ தரப்பிலிருந்து விலகிக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் இன்று கேட்டுக் கொண்டது. இதையடுத்து துல்சி விலகிக் கொண்டார்.
No comments:
Post a Comment