Wednesday, 8 June 2011

தவறான ஸ்கேன் ரிப்போர்ட்: ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

திருப்பூர்: தவறான ஸ்கேன் ரிப்போர்ட் கொடுத்த ஸ்கேன் சென்டரும், அதன் அடிப்படையில் ஆலோசனை வழங்கிய ரேடியாலஜிஸ்ட்டும் சேர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்ப்பம்


திருப்பூர் பாளையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சத்யா. கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பரில் சத்யா கர்ப்பமானர். சத்யா கர்ப்பம் தரித்த நாளிலிருந்து கணவர் விஜய் அவரை கண்ணை இமை காப்பது போல் பராமரித்தார்.



வளையன்காடு மனோ மருத்துவமனையில் தன்னை பரிசோதித்துக் கொண்ட சத்யா, டாக்டர் சாரதாவின் ஆலோசனைப்படி சத்தான உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து டாக்டர் சாரதா சொன்னதன் பேரில் திருப்பூர் அவினாசி ரோட்டிலுள்ள பூஜா ஸ்கேன் சென்டரில் கட்டணம் செலுத்தி ஸ்கேன் எடுத்துக் கொண்டார்.


ஸ்கேன் ரிப்போர்ட்டை பரிசோதித்த டாக்டரும் கருவில் குழந்தை எவ்வித குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளதாக கூறி மருந்து கொடுத்தார்.


பிரசவம்


சத்யா திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். 2009-ம் ஆண்டு செப்டம்பரில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு வலது கை முற்றிலும் இல்லாமல் இருந்தது. இதனால் சத்யாவும், அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கருவில் குழந்தை நலமாக இருக்கிறது. நல்ல வளர்ச்சி உள்ளது என அறிக்கை வழங்கிய ஸ்கேன் சென்டர் மீதும், அதற்கு தகுந்தாற்போல் மருந்து, சத்துணவு உட்கொள்ள ஆலோசனை வழங்கிய டாக்டர் மீதும் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் தங்களை நம்ப வைத்து மோசடி செய்தனர் என ஸ்கேன் சென்டர் உரிமையாளர் மீது ரூ. 10 லட்சம் இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதிரடி தீர்ப்பு

நீதிபதி தண்டபாணி, உறுப்பினர்கள் ரத்தினம், சரஸ்வதி ஆகியோர் வழக்கினை விசாரித்தனர். இவர்கள் ஸ்கேன் ரிப்போர்ட், டாக்டர் ஆலோசனை சீட்டுகள், இதர மருத்து ஆவணங்கள் ஆகியவற்றை சாட்சியாக கொண்டு தீர்ப்புக் கூறினர்.

ஸ்கேன் ரிப்போர்ட் தயாரித்த பூஜா ஸ்கேன் சென்டரும், அதன் அடிப்படையில் ஆலோசனை வழங்கிய மையத்தின் ரேடியாலஜிஸ்ட் கவிதா லட்சுமியும் சேர்ந்து ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அத்துடன் வழக்கு செலவுத் தொகையாக 1,000 ரூபாயையும் இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இவ்வழக்கில் இருந்து மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கிய டாக்டர் சாரதா விடுவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment