Monday 30 May 2011

எகிப்து-ஈரா​ன் இடையே உறவில் முன்னேற்றம்​:மேற்குலகம் அஞ்சுகிறது​-ஈரான்


டெஹ்ரான்:எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு எகிப்து-ஈரான் இடையே வளர்ந்து வரும் உறவு மேற்குலகம்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக ஈரானின் பாராளுமன்ற விவகார துறையின் துணை தலைவரான முஹம்மது ரிஸா மிர் தஜ்ஜெத்தினி தெரிவித்துள்ளார்.

எகிப்து – ஈரான் இடையே உறவு பலப்படுவது பிராந்தியத்தின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுக்குறித்து மேற்கு உலகிற்கு நன்றாக தெரியும். ஆதலால் டெஹ்ரான் – கெய்ரோ இடையேயான உறவை முறிக்க அவர்கள் என்ன விலையையும் கொடுக்க தயாராக இருப்பார்கள் என முஹம்மது ரிஸா IRNA செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். சமீபத்தில் எகிப்தின் மத – கலாச்சார துறைகளைச்சார்ந்த பிரபலமானவர்கள் ஈரானுக்கு வருகை தந்து சந்திப்பு நடத்தியதை முஹம்மது ரிஸா சுட்டிக்காட்டுகிறார்.

எகிப்து-ஈரான் இடையேயான உறவு,”ஆழமானது, பிரபலமானது, பாரம்பரிய ராஜதந்திர விதிகளுக்கு அப்பாற்பட்டது. இந்த உறவை எதிரிகளின் சதி திட்டத்தால் முறிக்க முடியாது”என முஹம்மது ரிஸா தெரிவித்தார்.

ஈரான் – எகிப்து இடையே கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து தூதரக உறவு இல்லை.

எகிப்து-இஸ்ரேல் இடையே 1978-ஆம் ஆண்டு கேம்ப் டேவிஸ் ஒப்பந்தம் போடப்பட்டதை தொடர்ந்து ஈரான் எகிப்தின் தூதரக உறவை துண்டித்தது. மேலும் ஈரானிலிருந்து வெளியேறிய  அமெரிக்க கைப்பாவையான சர்வாதிகாரி முஹம்மது ரிஸா பஹ்லவிக்கு அடைக்கலம் அளிக்க எகிப்து முன்வந்தது.

ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு ஈரானும், எகிப்தும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தன.

No comments:

Post a Comment