Monday 23 May 2011

ஆளில்லா விமானத்தாக்குதல்:பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு


இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென கோரி முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் தலைமையில் கராச்சியில் போராட்டம் நடைபெற்றது. கராச்சி துறைமுகத்திற்கு அருகே துவங்கிய போராட்டத்தின் முதல் நாள் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
ஆளில்லா விமானத்தாக்குதல்களுக்கு எதிராக நேட்டோவின் பாகிஸ்தானில் உள்ள தேவையான பொருட்களின் விநியோகத்தை தடைச்செய்ய தனது ஆதரவாளர்களுக்கு இம்ரான்கான் அழைப்பு விடுத்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பாகிஸ்தானிற்கு எதிரான போர் அல்ல. இது பாகிஸ்தானின் இறையாண்மையை தகர்ப்பதாகும். மேலும் தீவிரவாதிகளை வளரச்செய்யும் என இம்ரான்கான் குற்றஞ்சாட்டினார். பாகிஸ்தான் அரசு ஒருபுறம் தாக்குதலை கண்டிக்கிறது மறுபுறம் அமெரிக்காவை ஆதரிக்கிறது. இரண்டு தடவை பாராளுமன்றம் ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் அதன்பிறகு 24 மணிநேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது என இம்ரான் கான் குற்றஞ்சாட்டுகிறார்.

பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்காவின் அக்கிரமத்தை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் அரசுக்கு முடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு இடைக்கால தேர்தலை சந்திக்கட்டும் என இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில்,ஆளில்லா விமானத்தாக்குதல் தொடந்தால் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தலைவர் ஜெனரல் அஹ்மத் ஷுஜா பாஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். சி.ஐ.ஏவின் துணை இயக்குநர் மிஷேல் மோரலுடன் சந்திப்பு நடத்தியபிறகு பாஷா கடுமையான வார்த்தைகளால் பதிலளித்தார். ஐ.எஸ்.ஐயின் பல்வேறு துறை தலைவர்களுடன் மோரல் சந்திப்பை நடத்தினார். அமெரிக்க குடிமக்களை நாட்டில் கட்டுப்படுத்தவேண்டும் என ஐ.எஸ்.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment