கடந்த மாதம் 17 ஆம் தேதி பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து 16பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவிகள் என்பதால் தமிழக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கு குண்டுவெடித்தாலும் அதைச்செய்தது முஸ்லிம்கள் என்ற நச்சுக்கருத்து மக்களின் பொதுபுத்தியில் விதைக்கப்பட்டுள்ளதால் குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியமே இன்றி கையில் கிட்டும் சில முஸ்லிம்களை ஊடகங்கள் முன்பாகக் காட்டிவிட்டால் போதும் என்ற அவலநிலை நாட்டில் நிலவுகிறது.
முஸ்லிம்களெல்லாம் உலக மகா உத்தமர்கள் என்று யாரும் சொல்லவில்லை. அவர்களிலும் சிலர் தவறாக வழி நடத்தப்பட்டிருக்கக் கூடும் அல்லது நக்சலைட்,விடுதலைப்புலிகள் போன்று வெவ்வேறு கொள்கைக்காக குழுவாக செயல்பட்டிருக்கக்கூடும். குண்டுவெடிப்பு மட்டுமல்ல பிக்பாக்கெட் அடித்தாலும் அவன் முஸ்லிம் என்றால் நமது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
பெங்களூரு குண்டுவெடிப்பு நடந்த பிறகு உறுதியான தகவல்கள் கிடைக்காத நிலையில் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தன.மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு என்ற தகவலையொட்டி அந்த வாகனத்தின் சேசிஸ் எண்ணை வைத்து தமிழகத்தைச் சார்ந்தது என்று துப்பறிந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முதல் விற்கப்பட்ட ஷோரூம் வரை அனைத்து தகவல்களையும் பெற்றனர். அவர்களின் முதல்கட்ட விசாரணையில் தொடர்புடையவர்களில் எவருமே முஸ்லிம்கள் அல்லர்.
எனினும், குண்டு வெடித்திருப்பது பாஜக அலுவலகம் என்பதால் அதை முஸ்லிம்கள்தான் செய்திருக்க முடியும் என்ற பொதுபுத்தியில் பதிக்கப்பட்டுள்ள குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் விசாரணை முழுவதும் முஸ்லிம் இளைஞர்களைச் சுற்றியே சுழல்கிறது. இந்நிலையில்,நேற்றைய செய்தியில் வந்துள்ள தகவலில் முஸ்லிமல்லாத ஒருவருக்கும் தொடர்பிருப்பது உறுதியாகியுள்ள நிலையில் இதர ஊடகங்கள் முஸ்லிம் விரோத போக்கில் செய்தி வெளியிட்டுள்ளன.
அதாவது, குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட சிம்கார்ட் ஆர்.எஸ்.எஸ் பிரமுகருக்கு (கவனிக்கவும் "பிரமுகர்") சொந்தமானது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் கேரளா-கர்நாடகா எல்லைப்பகுதியைச் சார்ந்தவராம். (மங்களூர் என்று சொன்னால் குடியா மூழ்கிவிடும்?). அந்த பிரமுகரின் பெயர், முகவரி குறித்த எந்த விபரமும் வெளியிடப்படவில்லையாம். எனினும்,அந்த பிரமுகரின் சிம்கார்ட் குண்டுவெடிப்புக்கு இருநாட்கள் முன்னதாகவே காணாமல் போய்விட்டதாம். வழக்கை திசைதிருப்புவதற்காக (அப்பாவி?) ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் சிம்கார்டை பயன்படுத்தி இருக்கலாமோ என்றும் தனது கருத்தையும் கலந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பே பிரமுகரின் சிம்கார்டு காணாமல் போனதை ஏன் புகார் செய்யவில்லை? சிம் கார்டுதானே இதையெல்லாமா புகார் செய்வது என்று மெத்தனமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றாலும் இரண்டு நாட்களுக்கு முன்பே காணாமல் போனது என்று சொல்வதுதான் நெருடலாக உள்ளது. ஏனெனில், அந்த சிம்கார்டுதான் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்த பிறகு இவ்வாறு சொல்வதை எவனும் ஏற்கமாட்டான் என்ற குறைந்தபட்ச அறிவுகூட செய்தி வெளியிட்டவருக்கு இல்லை என்று சொல்வதில் தவறில்லை.
-அருணகிரி
நன்றி : இந்நேரம்
No comments:
Post a Comment