தீவிரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காலித் முஜாஹித் போலீஸ் கஸ்டடியில் வைத்து மர்மமான முறையில் மரணித்த நிகழ்வு குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி உ.பி மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 2007-ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்ட காலித் முஜாஹிதை ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு லக்னோ சிறைக்கு கொண்டு செல்லும்போது போலீஸ் வாகனத்தில் வைத்து மரணித்ததாக போலீஸ் கூறுகிறது.
அவர் சூரிய ஒளியின் தாக்குதலால் மரணமடைந்தார் என்று போலீஸ் கூறுகிறது. காலிதை பொய் வழக்கில் சிக்கைவைத்ததாகவும், அவரது மரணம் கொலை என்றும் குற்றம் சாட்டி அவரது மாமனார் ஸஹீர் ஆலம் ஃபலாஹி அளித்த புகாரின் அடிப்படையில் 42 போலீஸ் அதிகாரிகள் மீது பாராபங்கி போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.
தன்னை போலீஸ் பொய் வழக்கில் சிக்கவைத்துள்ளது குறித்து உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையின் போது காலித் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியம் கூறவிருந்த வேளையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
முன்னாள் டி.ஐ.ஜி விக்ரம் சிங், டி.ஜி.பி ப்ரிஜ்லால், சிறப்பு படை, தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணையை தவிர உள்துறை செயலாளர், ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த அரசு ஏற்பாடுச் செய்துள்ளது.
காலிதின் உடலில் தாக்குதல் நடத்திய அடையாளங்கள் இருந்தன. அவரது செவியில் இருந்தும் வாயில் இருந்தும் இரத்தம் ஒழுகியதை கண்டதாக நேரில் கண்டவர் கூறுகிறார். காலிதை நீதிமன்றத்தில் வைத்து சந்தித்தபோது அவர் நல்ல உடல் நலத்துடன் காணப்பட்டார் என்று வழக்கறிஞர்கள் முஹம்மது ஷோயபும், ரன்தீர் சுமனும் கூறுகின்றனர்.
நீதிமன்றத்தில் சந்தித்தபோது காலித் குர்தா அணிந்திருந்தார். ஆனால், அவரது இறந்த உடலில் டீ ஷர்ட் அணிவிக்கப்பட்டிருந்தது என்று இருவரும் தெரிவிக்கின்றனர். கழுத்தில் எலும்பு ஒடிந்திருந்ததை கண்டதாக பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக பாடுபடும் ரிஹாய் மஞ்சின் ராஜீவ் யாதவ் கூறுகிறார்.
முகம் கருமை நிறத்திலும், கழுத்தில் தாக்கப்பட்ட அடையாளங்களும் இருந்ததாக காலிதின் மாமனார் ஸஹீர் ஆலம் ஃபலாஹி கூறுகிறார். போலீஸ் காலிதை கொலைச் செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பியான பி.எல்.புனியா குற்றம் சாட்டுகிறார்.
உ.பி மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக 2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலித் மற்றும் தாரிக் காஸிமி ஆகியோரை சிறப்பு படையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து பெருமளவில் ஆயுதங்களை கைப்பற்றியதாக போலீஸ் கூறியது. ஆனால், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆர்.டி.நிமேஷ் கமிஷன், போலீஸின் வாதங்களில் சந்தேகத்தை எழுப்பியிருந்தது.இவர்களை பொய் வழக்கில் போலீஸ் கைது செய்தது என்று கமிஷன் கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து காலித் மற்றும் தாரிக் மீதான வழக்குகளை வாபஸ் பெற உ.பி மாநில அரசு முடிவுச் செய்தது. இதனைத் தொடர்ந்து பாரபங்கி நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறும் மனுவை அளித்தது. ஆனால், வழக்குகளை வாபஸ் பெற இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இதர மாவட்டங்களில் இவர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் நடவடிக்கையை துவக்கிய உ.பி அரசு, பாரபங்கி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுக முடிவுச் செய்தது. உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது காலித் சாட்சி கூறவிருந்தார். இதனை தடுக்கவே காலிதை போலீஸ் கொலைச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. காலிதின் மரணம் குறித்த போஸ்ட் மார்ட்டம் அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.
No comments:
Post a Comment