Thursday 27 October 2011

1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கைக்கு தடை: பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்!


உயர்கல்விக்காக பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் வங்கி கணக்கு அறிக்கை தொடர்பாக, பிரிட்டன் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் செயல்படும் 1,900 கூட்டுறவு வங்கிகளில் இருந்து பெறப்படும் வங்கி கணக்கு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என, அறிவித்துள்ளது.


இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரிட்டனுக்கு உயர்கல்வி படிக்கச் செல்கின்றனர். குறிப்பிட்ட படிப்புக்கான செலவு மற்றும் பிரிட்டனில் இருக்கும் போது அதற்கான செலவு என, அனைத்திற்கும் சேர்த்து மாணவர்களிடம் நிதி இருக்க வேண்டும் என்பது, பிரிட்டனின் மாணவர் விசா விதிகளில் ஒன்று.

அதன்படி, மாணவர்கள் தங்கள் விசா விண்ணப்பத்துடன், எவ்வளவு வைப்புத் தொகை வைத்திருக்கிறோம் என்பதற்கான வங்கியின் கணக்கு அறிக்கையையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதுவரை இந்தியாவில் உள்ள எந்த ஒரு வங்கியில், மாணவர் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அந்த வங்கி கணக்கு அறிக்கையை சமர்ப்பித்தால், அதை பிரிட்டன் அரசு ஏற்றுக் கொள்ளும்.

ஆனால், பிரிட்டன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் உள்ள 1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கை, விசா விண்ணப்பத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டுறவு வங்கிகள். அவை இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்பட்டு வருபவை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மாணவர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அவர்களின் வங்கி கணக்கு அறிக்கையை பரிசோதிப்பதற்காக சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளைத் தொடர்பு கொண்டால், அங்கிருந்து சரியான பதில் வருவதில்லை அல்லது தொடர்பே கொள்ள முடிவதில்லை அல்லது எந்த பதிலும் தெரிவிப்பதில்லை.

பிரிட்டன் குடியேற்ற சட்டப்படி, ஒரு வங்கி தொடர்ந்து இதுபோன்ற சரியான பதிலை அளிக்கவில்லையெனில், அதன் கணக்கு அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

கூட்டுறவு வங்கிகளுக்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் சர்வதேச வங்கிகள் என, 85 வங்கிகளில் மாணவர்கள் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அதன் அறிக்கையை விசா விண்ணப்பத்துடன் அனுப்பினால், அது ஏற்றுக் கொள்ளப்படும்.

தகுதி வாய்ந்த அந்த 85 வங்கிகளின் பட்டியலிலும், மேலும் சில மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். இந்த புதிய விதிமுறை, நவம்பர் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் வங்கிகளின் கருப்புப் பட்டியலையும் பிரிட்டன் முன்னர் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment