Saturday, 3 September 2011

சிரியா மீது ஐரோப்பிய யூனியன் இறக்குமதித் தடை!

டமாஸ்கஸ்: சிரியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.

சிரியாவில் அதிபர் பாஷார் அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 2200 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு ஐ.நா.சபையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

நாட்டின் மக்களை கொன்று குவிக்க வேண்டாம். ரத்தம் சிந்தாமல் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அதிபர் ஆசாத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், டெர்அல்-ஷேள் உள்ளிட்ட நகரங்களில் ஆசாத்துக்கு எதிராக போராடிய 14 பேர் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

சிரியா எண்ணை வளம் மிக்க நாடு. எண்ணை ஏற்றுமதியின் மூலம் 25 சதவீதம் வருவாயை அந்த நாடு ஈட்டி வருகிறது. இங்கிருந்து தான் 95 சதவீத எண்ணையை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. எனவே, ஆசாத்தின் ராணுவ நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்தது. அதற்காக தங்கள் நாடுகளுக்கு எண்ணையை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.

இதற்கு இங்கிலாந்து, போலந்து, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. எண்ணை இறக்குமதிக்கு அமெரிக்கா ஏற்கனவே தடைவிதித்துள்ளது. எண்ணை இறக்குமதிக்கு தடைவிதித்ததன் மூலம் சிரியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா கடும் எதிர்ப்பு

அதே நேரம் சிரியா மீதான இந்த தடைக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "சிரியா மீதான தடை நல்லதற்கல்ல," என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment