Monday 22 August 2011

திரிபோலியை நோக்கி முன்னேறி வரும் லிப்ய எதிர்பாளர்கள்

லிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று எதிர்ப்பாளர்கள் புகுந்து கடாபி ராணுவம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி ராணுவம் தோல்வி அடையக் கூடும். அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திரிபோலியில் இருந்து 160 கி.மீ கிழக்கில் உள்ள ஜ்லிடான் நகர் நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்கள் வசம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட எதிர்ப்புப் படையினர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளை நேற்று எட்டினர்.

இதையடுத்து அங்கு நிலை கொண்டிருந்த கடாபி ராணுவத்துடன் கடும் மோதல் நடந்தது. சிறு பீரங்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் கடாபி ராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களைத் தாக்கினர்.

நான்கு முனை தாக்குதல்: அதேநேரம் திரிபோலியின் மேற்கில் உள்ள ஜாவியா நகரைக் கைப்பற்றிய எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து ஜடாயிம் என்ற கிராமத்தை நேற்று கைப்பற்றினர். தொடர்ந்து திரிபோலியை நோக்கி அவர்களும் முன்னேறி வருகின்றனர், தெற்கில் இருந்தும் எதிர்ப்பாளர்கள் திரிபோலியை நெருங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கடற்பகுதி முழுவதையும் நேட்டோ கடற்படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. திரிபோலியின் மையப் பகுதியில் உள்ள மிட்டிகா விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் அந்நிலையத்தைக் கைவிட்டுச் சென்றதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பேச்சுவார்த்தைக்கு தயார்: எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி வரும் இச்சூழலில் லிபிய அரசு அவர்களை ஒடுக்கிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடாபி மகன் சயீப் அல் இஸ்லாம் நேற்று வானொலியில் பேசியபோது, "அரசு தனது போரைக் கைவிடாது. இறுதியில் நாங்கள் வெல்வோம், சரணடைய மாட்டோம். எதிர்ப்பாளர்கள் அமைதியை எதிர்பார்த்தால் அதற்கும் நாங்கள் தயார்" என்று தெரிவித்தார்.

எதிர்ப்பாளர்களுடன் இணைந்து போரில் ஈடுபடுவதற்காக நேட்டோவை லிபிய அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது. திரிபோலியின் பல மாவட்டங்களில் ஊடுருவியுள்ள எதிர்ப்பாளர்களுக்கும், கடாபி ராணுவத்துக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது.

இதில் எதிர்ப்பாளர்களைத் தோற்கடித்த ராணுவத்தைப் பாராட்டி நேற்று முன்தினம் வானொலி மூலம் பேசிய கடாபி, "அந்த எலிகளை(எதிர்ப்பாளர்கள்) நாம் தோற்கடித்து விட்டோம்" என்று கூறினார்.

உடனடி போர் நிறுத்தம்: லிபிய உள்துறை அமைச்சர் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பெங்காசியில் இயங்கி வரும் தேசிய இடைக்கால அரசின் துணைத் தலைவர் அப்துல் ஹபீஸ் கோகா கூறுகையில், "திரிபோலியின் மீதான தாக்குதல் துவங்கிவிட்டது. அங்குள்ள கடாபி எதிர்ப்பாளர்களுடன் இது நடத்தப்பட்டு வருகிறது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது" என்றார்.

No comments:

Post a Comment