Sunday, 17 July 2011

தொலைபேசி ஒட்டுக்கேட்பு:எஃப்.பி.ஐ விசாரணை

வாஷிங்டன்/லண்டன்:தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சிக்கியுள்ள சர்வதேச ஊடக தரகு முதலாளி மர்டோக்கிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ விசாரணையை துவக்கியுள்ளது. 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி நியூயார் இரட்டைக்கோபுரத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டது தொடர்பான குற்றச்சாட்டை எஃப்.பி.ஐ விசாரணை நடத்துகிறது. குடியரசு கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் கிங் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.


இதற்கிடையே ரூபர்ட் மர்டோக்கும், அவரது மகன் ஜேம்ஸ் மர்டோக்கும் பாராளுமன்ற பொது அவை குழுவின் முன்பு ஆஜராக ஒப்புக்கொண்டுள்ளனர். விசாரணை தொடர்பாக செவ்வாய்க்கிழமைக்குள் ஆஜராக வேண்டும் என நேற்று முன்தினம் கோரியிருந்தது. ஆனால், இக்கோரிக்கையை நிராகரித்த மர்டோக் விசாரணைக்கு ஒத்துழைக்கலாம் என அறிவித்தார். அமெரிக்க குடிமகனான தனக்கு ஆஜராக முடியாது என மர்டோக் கூறியிருந்தார். நியூஸ் இண்டர்நேசனல் சி.இ.ஒ ரபேக்கா ப்ரூக்ஸ் ஆஜராவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கிடையே, பிரிட்டனில் தனக்கு சொந்தமான ஊடக நிறுவனங்களை பூட்ட நியூஸ் கார்ப்பரேசன் தலைவர் மர்டோக் முயல்வதாக செய்தி வெளியாகியுள்ளது. மர்டோக்கிற்கு சொந்தமான வால் ஸ்ட்ரீட் ஜெர்னலும் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் அரசு மர்டோக்கிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சூழலில் விளம்பரத்துறையில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் காரணமாக ஊடக நிறுவனங்களை மூட மர்டோக் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார். தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவாதத்தை கிளப்பியதையடுத்து பிரிட்டனில் மர்டோக்கிற்கு சொந்தமான சன், தி டைம்ஸ், ஸண்டே டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு விளம்பரம் அளிப்பதில்லை என சில பெரிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்ச்சையைத் தொடர்ந்து நியூஸ்வேர்ல்ட் பத்திரிகையை மூடியபொழுதும் தந்திரமானமுறையில் மர்டோக் காய்களை நகர்த்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிறுவனங்களை மூடி எதிர்ப்புகள் தணிந்தபிறகு பினாமிகள் பெயரால் செய்தி நிறுவனங்களை திறக்கும் எண்ணத்தில் மர்டோக் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment