Sunday 17 July 2011

வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக உள்நுழைந்து பணி புரியும் தொழிலாளர்களை தடுக்கும் வகையில் பயோமெட்ரிக் முறையில் (விரல் ரேகை பதிவு) கணக்கெடுப்பு புள்ளிவிபரம் ஒன்றை மலேசிய அரசு தொடங்கியுள்ளது.


நீண்டகாலமாக நாட்டுக்கு பிரச்சினையாக உள்ள சட்டவிரோத தொழிலாளர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவில் அரசு இப்பணியை நாடு முழுவது முழுவீச்சில் தொடங்கியுள்ளது.

சட்டவிரோத குடியேறிகள், முறையான விசா இல்லாதவர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், கணக்கெடுப்பு நடத்தப்படும் அலுவலங்களுக்கு சென்று பெயர் விபரங்கள், தொழில், இனம், தமது விரல் அடையாளம், புகைப்படம், போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூலை 31ம் திகதி இதற்குரிய காலக்கெடு முடிவடையவுள்ளது. நாட்டின் குடிவரவு திணைக்களத்தினால் இந்த செயற்பாடு நடத்திச்செல்லப்படுவதாக உள்துறை அமைச்சர் தான் சிறீ மொஹ்மட் அடாம் தெரிவித்துள்ளார். இறுதி நேரம் வரை காத்திருக்காது இப்போதே பதிவுகளை மேற்கொள்ளும் படியும் அவர் சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மலேசியாவில் சுமார் 2 ல்லியனுக்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து சென்ற அகதிகளும் அங்கு எந்தவித வாழ்வாதார வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு ஐ.நாவின் அடையாள அட்டை ஒன்று மட்டுமே ஆவணமாக இருக்கிறது.

இந்நிலையில் இப்பதிவு நடவடிக்கை மூலம் தமக்கு தொடர்ந்து மலேசியாவில் தங்கியிருப்பதற்கு ஆபத்து வரலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் 7000 ற்கு மேற்பட்ட சட்டவிரோத தொழிலாளர்கள் தம்மை பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment