Friday, 10 June 2011

ராம்தேவ் வெளியிட்ட அரைகுறையான சொத்து விபரங்கள்


ஹரித்துவார்:முற்றும் துறந்த சன்னியாசியாக 9-வது வகுப்பில் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி ஆன்மீகத்தின் பெயரால் கோடிகணக்கான சொத்துக்களை திரட்டிய ராம்தேவ் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்திவருபவர்.

இந்நிலையில் அவருடைய சொத்துக்கள் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் சொத்துக்களை குறித்த விபரங்களை வெளியிடுவேன் என அவர் அறிவித்திருந்தார். நேற்று ஹரித்துவாரில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனக்கு 1100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்தார்.

தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நான்கு அறக்கட்டளைகளுக்கு 426.19 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும் அவற்றின் மீது 751 கோடி ரூபாய் செலவழித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பொருளாதார விவகாரத்திலும், செயல்பாடுகளிலும் ஒளிவுமறைவற்ற நிலையை வெளிப்படுத்தவேண்டும் என அவருடைய உதவியாளரும், நேபாளத்திலிருந்து வந்து இந்திய பாஸ்போர்ட்டை பெற்றவருமான பாலகிருஷ்ணா கூறினார்.

கணக்கு விபரங்கள் சரியாக தணிக்கை செய்யப்பட்டு சட்டரீதியான வரிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பாலகிருஷ்ணா ராம்தேவுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பெயர்விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இதன் விபரங்களை பெறலாம் என மழுப்பலான பதிலை தெரிவித்தார் அவர்.

திவ்ய யோகி மந்திர் 249.63 கோடி ரூபாயும், பதஞ்சலி யோகா பீடத்திற்கு 164.80 கோடி ரூபாயும் பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளைக்கு 9.977 கோடி ரூபாயும் ஆச்சார்யாகுல் ஷிக்‌ஷா சன்ஸ்தானுக்கு 1.79 கோடி ரூபாயும் சொத்துக்கள் இருப்பதாக ராம்தேவ் வெளியிட்டார். அதேவேளையில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்து ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் மெளனம் சாதித்தனர்.

இவற்றைத் தவிர வேறு விவரங்களை பால்கிருஷ்ணா தெரிவிக்கவில்லை. மேலும் தங்களது அமைப்பின் பாலன்ஸ் ஷீட் தங்களது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மட்டும் அவர் தெரிவித்தார்.

பால்கிருஷ்ணாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டபோது அவர் சரிவர பதிலளிக்கவில்லை. மேலும் அவரது பாஸ்போர்ட் போலியானதா என்ற கேள்விகளுக்கும் அவர் சரிவர பதிலளிக்கவில்லை. எனது பாஸ்போர்ட் தூய்மையானது, நான் இந்தியன்தான் என்று கூறினார். தொடர்ந்து கேள்விகள் குவியவே அவர் எழுந்து போய் விட்டார். சற்று நேரத்தில் பாபா ராம்தேவும் எழுந்து சென்று விட்டார்

No comments:

Post a Comment