Wednesday, 25 May 2011

இரும்பு மனிதர்கள்!


‘ஆது’ கூட்டத்தினரின் அழிவுக்குப் பிறகு தோன்றியவர்கள்தான் ‘ஸமூத்’ கூட்டத்தினர்.
ஸமூது கூட்டத்தினரை ‘இரம்’ வம்சத்தினர் என்றும் ‘ஹிஜ்ர்’ வாசிகள் என்றும் அல்குர்ஆன் அழைக்கிறது. அதன் 15-வது அத்தியாயத்திற்கு ‘அல்ஹிஜ்ர்’ என பெயர் சூட்டப்பட்டு அவர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.



மதீனாவிலிருந்து சுமார் 347 கி.மீ. தொலைவில் ‘தபூக்’ நகருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது தான் ‘அல்உலா’ நகரம். அங்குதான் ஹிஜ்ர் பகுதி உள்ளது. இப்போது அதை ‘மதாயின் ஸாலிஹ்’ -(ஸாலிஹ் (அலை) அவர்கள் வசித்த ஊர்) என்று அழைக்கின்றார்கள்.
கடும் பலம் வாய்ந்த சமுதாயமாக படைக்கப் பட்டிந்த ஸமூத் கூட்டத்தினர், சிலைகளை வணங்கிக் கொண்டும், ஆடம்பர வாழ்க்கையில் திழைத்துக் கொண்டும், மலைகளைக் குடைந்து, கோட்டைகள் கட்டி வாழ்ந்தும் வந்தார்கள். தோட்டங்களும் நீரூற்றுக்களும் வேளாண்மைகளும் பேரீத்தத் தோட்டங்களும் அங்கு மிகுந்த காணப்பட்டன.
அவர்களிடம் நபியாக அனுப்பப்பட்ட ஸாலிஹ் (அலை) அவர்களின் ஓரிறைக் கொள்கையையும் தூதுத்துவப் பிரச்சாரத்தையும் ஏற்க மறுத்தனர்.
நீங்கள் இறைத்தூதர் என்பதற்கு ஏதேனும் அத்தாட்சியை கொண்டு வந்தால்தான் உங்களை நபியாக ஏற்போம் என்றனர். இவ்வாறு முறையிடுவது அவர்களுக்கு சோதனையாகவும் தண்டனையாகவும் அமைந்து விடும் என்பதை புரியாத அவர்கள் தம் கோரிக்கையில் பிடிவாதமாகவும் இருந்தனர்.
அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, கண்கூடான அத்தாட்சியாக பெண் ஒட்டகம் ஒன்றை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.
நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்பதற்கு இதோ நீங்கள் கேட்ட அத்தாட்சி! இதனை எந்த தொந்தரவும் செய்யாமல் பூமியில் மேய விட்டு விடுங்கள்! அதற்கென தண்ணீர் அருந்தும் நாள் ஒன்றை ஒதுக்கிவிடுங்கள்! இதற்கு தீங்கிழைத்தால் அல்லாஹ்வின் தண்டனையை சந்திக்க நேரிடும் என்று ஸாலிஹ் (அலை) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
அந்த சமுதாயத்தில் மதிப்பும், பலமும் வாய்ந்த, திமிர் பிடித்த ஒருவன் ஸாலிஹ் (அலை) அவர்களின் உபதேசத்தையும், எச்சரிக்கையும் மீறி அந்த அற்புத ஒட்டகத்தை அறுத்து விட்டு, ஸாலிஹே! நீர் உண்மையில் அல்லாஹ்வுடைய தூதராக இருந்தால் நீர் வாக்களித்த தண்டனையை கொண்டு வாரும்! என்றான்.
மூன்று நாட்கள் வரை உங்கள் வீடுகளில் சுகம் அனுபவியுங்கள்! இது பொய்ப்பிக்கப்படாத வாக்கா கும் என்றார்கள் ஸாலிஹ் (அலை) அவர்கள். மூன்று நாட்கள் முடிந்தன.
அக்கிரமக்காரர்களை பெரிய சப்தத்துடன் கூடிய, பயங்கர இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. காலை பொழுதில் அவர்கள் தம் வீடுகளில் தலை குப்புற பிணமாக மடிந்து கிடந்தது படங்களில் நீங்கள் காணும் இந்த வீடுகளில்தான்.
அநியாயக்காரர்களின் அழிவுக்கு ஸமூது கூட்டத்தினரை அல்லாஹ் அடையாளமாக்கினான்.
ஸாலிஹ் (அலை) அவர்களுடன் இறை நம்பிக்கை கொண்ட முஃமின்களை அல்லாஹ் காப்பாற்றினான்.
நபி (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்கு செல்லும் போது வாகனத்தில் அமர்ந்தபடியே போர்வையால் தம்மை மறைத்துக் கொண்டு அந்த இடங்களை விட்டும் விரைவாகக் கடந்தார்கள்.
ஹிஜ்ர் பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் அருந்தவோ, தண்ணீர் நிரப்பிக் கொள்ளவோ வேண் டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள். நாங்கள் நீரை நிரம்பிக் கொண்டோம். அந்த தண்ணீரைக் கொண்டு மாவும் பிசைந்து விட்டோமே! என்று நபித் தோழர்கள் கூறியபோது, தண்ணீரை ஊற்றி விடுங்கள்! மாவையும் வீசி விடுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு கிடைத்த தண்டனை போன்று உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்ற அச்ச உணர்வுடனும் அழுதவாறும் நுழையுங்கள் என்று உபதேசித்தார்கள்.
அந்த நகரம் இப்போது சுற்றுலாத் தளமாக மாறிவருகிறது. யூத, கிருத்துவர்கள் தங்களின் பண்டைய கலாச்சாரத்தை மீட்பதற்காக, வழிகெட்ட தம் முன்னோரின் தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
(பார்க்க: அல்குர்ஆன் (7:73&-79) (11:61&-68) (15:80) (26:141&-156) (96:4-5) புகாரி 3377, -3381)

No comments:

Post a Comment