Friday, 23 August 2013

நீதிபதிகள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ! மத்திய மாநில அரசுகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை !!

இதுதொடர்பாக மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
“நம் நாட்டில் அனைத்து சமூக மக்களும் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து துறைகளிலும் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை அவர்கள் பெற்றிட வேண்டும். இதுவே சமூக நீதியாகும். ஆனால் இந்நாட்டில் வாழுகிற பெரிய சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்கள் அனைத்து துறைளிலும் தொடர்ந்து பின்தங்கியே உள்ளனர். 

தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கியினை மனதில் கொண்டு போட்டி போட்டு வாக்குறுதி வழங்கும் அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற  பின் அவர்களை கண்டு கொள்வதில்லை. அனைத்து துறைகளிலும் முஸ்லீம்கள் பின் தங்கியுள்ளனர் என புள்ளி விபரங்களை பட்டியலிட்ட சச்சார் கமிஷன் நீதித்துறையிலும், முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியுள்ளதை புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்தியது.
இந்த அறிக்கை வெளிவந்து ஆறு வருடங்கள் ஆன பின்பும் அதை விட மோசமான நிலையே தற்போதும் நீடிக்கிறது.
நம் நாட்டின் 24 உயர்நீதிமன்றங்களில் 632 நீதிபதிகள் தற்போது பதவியில் உள்ளனர். இவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 32. இது மொத்த எண்ணிக்கையில் 5% மட்டுமே.  24 உயர் நீதிமன்றங்களில் 11நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளே இல்லை என்பது வேதனையளிக்கும் செய்தியாகும். மற்ற 13 நீதிமன்றங்களில் மட்டும்தான்32 முஸ்லிம் நீதிபதிகள் பதவியில் உள்ளனர்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் 43 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம். அவரும் அடுத்த வருடம் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் நீதிபதிகளை நியமிப்பதற்கான குழு (உச்சநீதிமன்ற கொலிஜியம்) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு8 பேரை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. அவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.
சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்ற கொலிஜியம் குழுவிற்கு பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களில் ஒரு முஸ்லிம் நீதிபதியின் பெயரும் இல்லை என்ற செய்தியும் கவலைக்குரியது.  தகுதியான அனுபவம் பெற்ற முஸ்லிம் வழக்கறிஞர்கள் நீதிபதி பதவிக்கு முயற்சித்தும், அவர்கள் திட்டமிட்டு புறக்கணிப்படுகிறார்கள் என்பது பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக சொல்லும் குற்றச்சாட்டு.
இந்நிலையில் என்ன சமூக நீதியை நம் நாட்டில் நிலை நாட்டப்போகிறோம் என்பது தெரியவில்லை. நீதிபதிகள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,சமூக நீதியை நிலை நிறுத்த வேண்டும் எனவும் மத்திய அரசையும் தமிழக முதல்வரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
ஜனாதிபதி அவர்கள் நீதிபதிகள் நியமனத்தில் முஸ்லிம்களின் நிலையை கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். ’’ இவ்வாறு தெரிவித்தார்

No comments:

Post a Comment