Sunday, 19 May 2013

யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்கள் ஜனநாயகத்தை கேலிச் செய்கின்றன!-பிரசாந்த் பூஷண்!


கோழிக்கோடு: யு.ஏ.பி.ஏ போன்ற கறுப்புச் சட்டங்கள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும், உச்சநீதிமன்றத்தில்மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் கூறினார்.
கோழிக்கோட்டில் ஜமாஅத்தே இஸ்லாமியின் இளைஞர் அமைப்பான சோலிடாரிட்டி நடத்திய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக வந்த பிரசாந்த் பூஷண் தேஜஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியது: செல்வ வளம் மிக்க தனியார் சக்திகளுக்கு மத்திய - மாநில அரசுகள் இலவசமாக காடும் நிலமும் பெருமளவில் வழங்குகின்றன.சுரங்கத்தொழிலை நடத்தவும், இயற்கை வளங்களை ஏற்றுமதிச் செய்யவுமே இவ்வாறு வழங்கப்படுகிறது.பாரம்பரிய வாழ்வாதாரங்களை இழக்கும் பழங்குடியினரும், தலித்துகளும், சாதாரண மக்களும் இதற்கு எதிராக போராடினால் அவர்கள் மீது மாவோயிஸ்ட் முத்திரை குத்தப்படுகிறது.
இவர்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் கறுப்புச் சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தடா, பொடா போன்ற சட்டங்களினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இவர்களே ஆவர்.நாட்டில் பெரும்பான்மையினரான ஏழை மக்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்கவே கறுப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்தியாவில் மத்திய அரசை ஜனநாயக அரசு என்று அழைப்பதே முரண்பாடாகும். தனியார் ஏகபோக முதலாளிகள்தாம் மத்திய அரசை இயக்குகின்றனர். சொந்த பாரம்பரியத்தையும், தொழிலையும் பாதுகாப்பதற்காக வேறு வழியின்றி வட இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி போராடுகின்றன.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள பல இயக்கங்களுக்கும் ஜனநாயகத்தின் மீதும், நீதிபீடத்தின் மீது அவர்களின்நம்பிக்கையை இழக்கச் செய்தது அதிகாரிகள் ஆவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அந்தஸ்தை இந்தியா எதிர்காலத்தில் இழக்க நேரிடும்.அதற்கு பதிலாக மிக அதிகமான கறுப்புச் சட்டங்களைக் கொண்ட நாடு, ஊழல்வாதிகளைக் கொண்ட நாடு என்ற அந்தஸ்துதான் இந்தியாவுக்கு கிடைக்கும்.
மத்திய அமைச்சரவையில் பாதிக்கும் அதிகமானோர் ஊழல் குற்றச்சாட்டுக்களை சந்திக்கின்றனர்.இதனை மூடி மறைக்கவே புதிய கறுப்புச் சட்டங்கள்.தங்களுக்கு பிடிக்காதவர்களையெல்லாம் சிறையில் அடைக்கவே அதிகாரிகள் விரும்புகின்றனர்.காங்கிரசும், பா.ஜ.கவும் இதில் சமமாகவேஉள்ளன.பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்,பின் யோசிக்காமல் இத்தகைய சட்டங்களுக்கு ஆதரவளிக்கின்றனர்.மனித உரிமைகளுக்கோ, குடியுரிமைகளுக்கோ எந்த மதிப்பும் தராதவர்கள் தாம் ஆட்சியாளர்கள்.இந்தியாவில் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் நுற்றுக்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளன. அரசியல் சாசனத்திற்கு எதிரான இச்சட்டங்கள் நீடிக்க கூட தகுதியில்லை.அதில் இறுதியானதுதான் யு.ஏ.பி.ஏ சட்டம்.
கேரள மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கண்ணூரில் சிறுபான்மை மக்கள்மீதும், மாவேலிக்கரையில் மனித உரிமை ஆர்வலர்கள் மீதும் யு.ஏ.பி.ஏ சட்டத்தை பிரயோகித்தது கண்டனத்திற்குரியது.கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் களமிறங்கவேண்டும்.இவ்வாறு பிரசாந்த் பூஷண் கூறினார்.

No comments:

Post a Comment