Friday, 17 May 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோரிக்கை!


பெங்களூரு மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்பு பாஜகவின் அரசியல் லாபத்திற்காக நடத்தப்பட்ட சதி செயல் என்றும் இந்த அரசியல் சதிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுவதாக, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் காவல்துறை ஆணையரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர்கள் கூறும்போது; பெங்களூரு மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்பு, பாஜகவின் அரசியல் லாபத்திற்காக நடத்தப்பட்ட சதி செயல், கர்நாடகத்தில் ஆட்சியின் போது மக்கள் செல்வாக்கை இழந்த பாஜக, அரசியல் அனுதாபத்திற்காக இத்தகைய சதிச் செயலை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது. பாஜகவின் இந்த அரசியல் சதிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்பட்டு வருகின்றனர். பாஜக அலுவலகத்தில் குண்டு வெடித்தால் அது பாஜகவுக்கு தான் லாபம் என்பதால் இதில் முஸ்லிம்கள் ஈடுபடுவதற்கு வாய்ப்பில்லை. ஆக இது நன்கு திட்டமிடப்பட்ட சதி என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த அரசியல் சதிகளுக்கு கர்நாடகா மற்றும் தமிழக காவல்துறையும் துணை நின்று அப்பாவி தமிழக இளைஞர்களை கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கடுமையான முறையில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு குற்றவாளியாக்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை செய்து வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். இது பரவலாக அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்திருந்தன. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் காவல்துறையே சில பொருட்களை கையில் கொண்டுவந்து, அதனை கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள் என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதனை சந்தித்து கேட்கும் போது, கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளிலிருந்து அவ்வாறான பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றார். மேலும் ஊடகங்களில் வந்த செய்திகளை மறுத்த அவர் காவல்துறைக்கும் இந்த செய்திக்கும் எந்த சம்மதமுமில்லை என்று சொன்னார். மேலும் இந்த கைது சம்பவத்தில் தமிழக காவல்துறைக்கு சம்பந்தமில்லை என்றும் இது முழுக்க, முழுக்க கர்நாடகா காவல்துறை தொடர்புடையது என்று கூறினார்.
தமிழக மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக காவல்துறையின் பொறுப்பு. அதுபோல் கோவை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது கோவை காவல்துறை பொறுப்பு. ஆனால் தமிழக காவல்துறை இந்த கைது படலத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என்று கைவிரிப்பது தமிழகத்தில் தனி மனிதனின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது. தமிழக காவல்துறையின் இத்தகைய செயல் கண்டனத்திற்குரியது.
ஆகவே தமிழக, கர்நாடக காவல்துறை மீதோ, உளவுத்துறை மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்பாவி இளைஞர்கள் கைது செய்வதை நிறுத்தவேண்டும்.” என்றனர்.

முன்னதாக இன்று காலை இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பின் தலைவர்கள், கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரி மற்றும் பஷீர் வீடுகளுக்கு சென்று அவர்களின் உறவினர்களை சந்தித்து கைது குறித்தும், காவல்துறையினரின் சோதனை குறித்தும் உண்மை விவரங்களை கேட்டறிந்தனர். இன்று இரவு அவர்கள் கோவையிலுள்ள அனைத்து ஜமாத் தலைவர்களை சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
இந்த சந்திப்பில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா, ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் அப்துல் ரஹ்மான் சாகிபு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் பக்ரூதீன், தமுமுக வின் பொது செயலாளர் அப்துல் ஸமது, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் ஃபரூக், இந்திய தேசிய லீக் தலைவர் இனாயதுல்லாஹ், வெல்ஃபேர் பார்டி ஆப் இந்தியாவின் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபீதீன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment