Saturday, 18 May 2013

கேரளாவில் 21 அப்பாவி முஸ்லிம்கள் கைது சம்பவம்! - போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது! - மனித உரிமை அமைப்பு அறிக்கை!


கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள நாராத் பகுதியில் வெடிக்குண்டுகளுடன் ஆயுதப் பயிற்சில் செய்ததாக கூறி 21 பேரை கைது செய்த சம்பவம் போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது என்று உண்மைக் கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் நடத்திய தீவிர விசாரணையில் போலீசாரின் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பேரா.மார்க்ஸ், புதுவை ஜி.சுகுமாரன் ஆகியோர் அடங்கிய இந்த உண்மை அறியும் குழு இந்த விசாரணையை நடத்தியுள்ளது. 

இது குறித்த அவர்களின் விசாரணை அறிக்கையில்; “தணல் அறக்கட்டளைக்குச் சொந்தமான கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் கட்டிடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது வெடிக்குண்டுகள் அல்ல என்றும், வெடிக்குண்டு போல் தோன்றும் பொருள் என்றும் அக்கட்டிடத்தில் போலீஸ் நடத்திய ரெய்டுக்கு தலைமை தாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் கல்யாடன் உண்மைக் கண்டறியும் குழுவிடம் தெரிவித்துள்ளார். 

இவ்வழக்கை விசாரிக்கும் கண்ணூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் பி.சுகுமாரன், நாராத் பஞ்சாயத்து தலைவரும் சி.பி.எம்(மார்க்சிஸ்ட்) பிரதிநிதியுமான கே.வி.மேமி, வார்டு உறுப்பினரும் முஸ்லிம் லீக் பிரதிநிதியுமான கே.பி.ஸலாம் ஹாஜி, கட்டிடத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீட்டினர் ஆவர், 

ஜமாஅத் கமிட்டி உறுப்பினர்கள், ஃபலாஹ் ஆங்கில பள்ளிக்கூடத்தின் முதல்வர் பி.முஸ்தஃபா, கைதுக்கு சாட்சிகளான ஸலீம், ஜாஃபர், கே.பி.மூஸான் குட்டி உள்ளிட்ட ஏராளமானோரிடமிருந்து வாக்குமூலங்களை என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் உண்மைக் கண்டறியும் குழு சேகரித்துள்ளது. கட்டிடத்தில் வெடிக்குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளை அருகில் வசிக்கும் சுதீஷ், அப்துல்லாஹ், ஸலீம், மூஸான் குட்டி ஆகியோர் மறுக்கின்றனர். 

யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த 21 இளைஞர்களையும் முதலில் வந்த நான்கு போலீசார் ஸ்டேசனுக்கு வருமாறு கூறி மய்யில் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவ்வேளையில் ஆயுதங்களோ, சந்தேகத்திற்குரிய பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. பின்னர் 45 நிமிடத்திலிருந்து ஒன்றை மணிநேரத்திற்குள் ஆயுதப் பயிற்சி என்ற செய்திகள் பரப்புரைச் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இக்கட்டிடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சந்தேகத்திற்குரிய எவையும் தங்களது பார்வையில் படவில்லை என்றும், நிகழ்ச்சிகளெல்லாம் அமைதியாகவே நடந்துள்ளது என்றும் அருகில் வசிப்போர் கூறியதாக என்.சி.ஹெச்.ஆர்.ஓ குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். 

அதுமட்டுமல்ல மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உள்ள இக்கட்டிடத்தின் உள்ளே என்ன நடந்தாலும், வெளியே நடந்து செல்லும் நபர்களால் பார்க்க முடியும். வெளியே நின்று பார்த்தால் கட்டிடத்தின் உள்ளே நடக்கும் நிகழ்ச்சிகள் தெளிவாக தெரியும் அளவுக்கு அங்குள்ள பெரிய க்ரில்களை கொண்ட ஜன்னல்கள் உள்ளன. ஏதேனும் வகையான பயிற்சிகள் அங்கு நடந்ததாக கூறுவது அறிவுக்கு பொருந்தாதது ஆகும். இதற்கு முன்பும் புகார் கிடைத்ததையொட்டி போலீஸ் நடத்திய பரிசோதனையில் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று மய்யில் பகுதியின் சப்-இன்ஸ்பெக்டர் கூறுகிறார். இதிலிருந்து போலீஸின் தொடர் கண்காணிப்பின் கீழ் இக்கட்டிடம் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. 

கடந்த உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளால் முஸ்லிம் லீக்கிற்கு பஞ்சாயத்தின் ஆட்சியை இழக்க நேரிட்டது. மேலும் மணல் மாஃபியாக்களுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதுபோன்ற காரணங்களால் அரசியல் பழிவாங்குதல் நடைபெற்றுள்ளதா? என்பதுக் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும். 

ஆதாரங்களாக போலீஸ் கூறும் 172 பொருட்களில் யு.ஏ.பி.ஏ சட்டத்தை பிரயோகிக்கும் அளவுக்கு வலுவான ஆதாரம் இல்லை. 10 ரூபாய் நோட்டுக்கள், பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ, துபாயில் இருந்து கிஷ் தீவுக்கு விசா மாற்றுவதற்காக செல்லும்போது அளிக்கப்படும் அடையாள அட்டை, 65 செ.மீ நீளமுள்ள வாள், சணல் நூல், ஆணிகள், அடையாள அட்டை, கம்புகள், செங்கற்கள் ஆகியவற்றை கொடூரமான ஆயுதங்களாக போலீஸ் ஊடகங்களுக்கு முன்னால் காட்சிக்கு வைத்தது. கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் சி.டிக்களும், பொதுமக்களுக்கு விநியோகித்த துண்டு பிரசுரங்களும் ரகசிய ஆவணங்கள் என்று போலியாக போலீஸ் சித்தரித்தது. கைது செய்யப்படும் வேளையில் உச்சநீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ள நிபந்தனைகள் எதுவும் 21 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைது செய்யும்போது போலீஸ் கடைப்பிடிக்கவில்லை” என்பது உண்மை கண்டறியும் குழுவினர் நடத்திய விசாரணையில் தெளிவாகியுள்ளது. 

உண்மைக் கண்டறியும் குழுவில் என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய செயலாளர் ரெனி ஐலின்(திருவனந்தபுரம்), தேசிய செயற்குழு உறுப்பினர்களான பேராசிரியர் அ.மார்க்ஸ்(சென்னை), ஜி.சுகுமாரன்(புதுவை), கேரள மாநில என்.சி.ஹெச்.ஆர்.ஓ உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஏ.சுக்கூர்(மலப்புரம்), எழுத்தாளரும், ஆர்வலருமான கே.எம்.வேணுகோபால்(கண்ணூர்), பத்திரிகையாளரான முஹம்மது ஷபீர்(மங்களூர்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

No comments:

Post a Comment