இந்தியாவில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில்
உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர்
உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவின் தென்பகுதியில் தகுரியாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட அந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், நோயாளிகள்.
அடுக்குமாடிக் கட்டடமான அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, அந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், விபத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
தீயணைப்புப் படையினர் இன்னும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 190 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனையில், 160 நோயாளிகள் இருந்ததாக மருத்துவமனையின் மூத்த துணைத் தலைவர் ஏ. உபாத்யாய, அசோஸியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மூச்சுத் திணறி சாவு
உயிரிழந்த நோயாளிகளில் பெரும்பாலானவர்கள், கடுமையான புகை காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதாக மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஃபிர்ஹத் ஹக்கிம் தெரிவித்தார்.
ஐம்பது நோயாளிகள், அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், தற்போது நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாகவும் தீயணைப்புப் படைத் தலைவர் கோபால் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
பொதுமக்கள் உதவி
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேருவதற்கு முன்னதாக, அருகில் குடியிருந்த மக்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் ஏறிச்சென்று, நோயாளிகளை மீட்கும் வேலையில் ஈடுபட்டார்கள்.
அந்த மருத்துவமனை, நவீன வசதிகள் கொண்ட பிரபல மருத்துவமனையாக இருந்தாலும், அது குறுகிய தெருக்கள் கொண்ட பகுதியில் அமைந்திருப்பதால், தீயணைப்புப் படையினர் உடனடியாக அங்கு சென்றடைய முடியவில்லை. அதனால், கீழ் தளத்தில் பற்றிய தீ மேல் தளங்களுக்கு வேகமாகப் பரவிவிட்டது.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், நோயாளிகள் பெரும்பாலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மருத்துவமனை உதவியாளர்கள் தன்னை எழுப்பி, படிக்கட்டுகள் வழியாக தன்னை இழுத்து வந்ததாக மீட்கப்பட்ட நோயாளி ஒருவர் தெரிவித்தார்.
ஜன்னல் வழியாக தான் தப்பியபோது, பல சடலங்களைப் பார்த்ததாக 35 வயதான அனன்யா தாஸ் என்ற பெண் நோயாளி ஒருவர் தெரிவித்தார்.
மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளின் பாதுகாப்புக் குறித்து அக்கறை காட்டவில்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் புகார் கூறினார்கள்.
No comments:
Post a Comment