Tuesday, 25 October 2011

ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் அண்ணா ஹசாரே குழுவினருக்கு தொடர்பு: திக்விஜய்சிங் குற்றச்சாட்டு

புது தில்லி : சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவினருக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார்.  

அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் முறைகேடாக பண பரிமாற்றம் செய்தது குறித்த குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலளித்துள்ளது. இதிலிருந்தே அண்ணா ஹசாரே குழுவினருக்கு ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றார்.  


அண்ணா ஹசாரே மற்றும் ராம்தேவ் குழுவினரின் பிரசாரம் முழுக்க முழுக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்று தான் தொடக்கத்திலிருந்தே கூறிவந்தது இப்போது உண்மையாகியுள்ளது என்று அவர் கூறினார். இவர்களது பிரசாரத்துக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக துணை நிற்கின்றன என்று குறிப்பிட்டார். ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கத்துக்கு திரட்டப்பட்ட நிதி எதற்காக கேஜ்ரிவாலின் அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது என்று அவர் கேள்வியெழுப்பினார்.  

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிப்படைத் தன்மை தேவை என்று கேஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். அவ்விதம் கூறிவரும் கேஜ்ரிவால், இப்போது செயல்பட்ட விதம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.  இதேபோல அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொரு உறுப்பினர் கிரண் பேடி மீதும் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார். 

விமான பயணத்தின் போது எஞ்சிய பயண கட்டண தொகையை இப்பிரச்னை கிளம்பிய பிறகு தருவதாகக் கூறுவது எந்த வகையில் சரியான செயல் என்று கேள்வியெழுப்பினார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், அந்தத் தொகையைத் திரும்ப அளித்துவிட்டால் அவர்கள் செய்த குற்றம் சரியாகிவிடும் என்பதைப் போலுள்ளது. கிரண் பேடியின் செயல் சரியெனில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பணத்தை திருப்பி அளித்துவிட்டு சிறையிலிருந்து வந்துவிடலாமா? என்று கேள்வியெழுப்பினார்.  

வருண் காந்தி பதிலடி: சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவினர் மீது மீண்டும் மீண்டும் குறைகூறுவதை திக்விஜய் சிங் நிறுத்த வேண்டும் என்று பாஜக மக்களவை உறுப்பினர் வருண் காந்தி கூறினார். ராம் லீலா மைதானத்தில் ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது அதற்கு ஆர்எஸ்எஸ் பின்புலமாக உள்ளது என்று முன்னர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார்.  ஆனால் அதை அப்போதே மறுத்துவிட்டனர். ஜன லோக்பால் மசோதாவை முழுமையாக வரவேற்பதாகக் குறிப்பிட்ட வருண் காந்தி, பெருகிவரும் ஊழல் குற்றச்சாட்டுகளால் விரக்தியடைந்துள்ள சராசரி இந்தியர்களில் தானும் ஒருவன் என்று குறிப்பிட்டார். 

ஊழலுக்கு எதிராகப் போராடும் ஹசாரே மீது புழுதிவாரித் தூற்றுவதை திக்விஜய் சிங் நிறுத்த வேண்டும் என்றார். இதுவரை தான் ஹசாரேயை சந்தித்தது கிடையாது என்று குறிப்பிட்ட வருண், ராம் லீலா மைதானத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தபோது அங்கு சென்றதாகக் குறிப்பிட்டார். கனவில் வரும் எதிரிகளுடன் சண்டையிடுவது அல்லது ஜெயிக்கவே முடியாது எனும் நிலையில் பிதற்றுவது போன்று திக்விஜய் சிங் பேச்சுகள் உள்ளன என்றார்.  

கூடுதல் கட்டணத்தை திருப்பித் தரத் தயார்:

கிரண் பேடி  புதுதில்லி: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமிருந்து கூடுதலாகப் பெற்ற பயணக்கட்டணம் திருப்பித் தரப்படும் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.  

சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் குழுவில் இடம்பெற்றுள்ள கிரண்பேடி, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமிருந்து கூடுதல் பயணக் கட்டணத்தைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா உள்ளிட்ட பிரபல பிரமுகர்கள் இது குறித்து கேள்வியெழுப்பினர்.  

இது குறித்து திங்கள்கிழமை கிரண்பேடி தெரிவித்ததாவது:  

கூடுதல் கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் திருப்பித் தரும்படி எனது பயணத்துக்கு ஏற்பாடு செய்த டிராவல் ஏஜெண்டுக்கு "இந்தியா விஷன் ஃபவுண்டேஷன்' நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் எதிர்காலத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவதற்காகச் செல்லும்போது பயணக் கட்டண விவகாரத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்ளும்படி நிர்வாகத்தினர் தீர்மானம் இயற்றியுள்ளனர். இதனால் இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்பதற்கு ஏதுமில்லை என்றார்.  

இந்தியா விஷன் ஃபவுண்டேஷன் என்ற அரசுசாரா தன்னார்வத் தொண்டு அமைப்பில் உறுப்பினராயுள்ள கிரண்பேடி, அவ்வமைப்பின் சார்பிலேயே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றார். இந்த அமைப்பின் மற்றொரு உறுப்பினரான அனில் பால் என்பவரின் டிராவல் ஏஜென்சி மூலமே கிரண் பேடி பயணங்களை மேற்கொணடுள்ளார்.  

குடியரசுத்தலைவர் விருது பெற்றுள்ள கிரண் பேடிக்கு விமான பயணத்தில் 75 சதவீதம் கட்டணச் சலுகை உண்டு. கட்டணச் சலுகையைப் பயன்படுத்திய கிரண்பேடி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் முழுக்கட்டணத் தொகையையும் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  

கூடுதலாகப் பெற்ற கட்டணத் தொகையை தனிப்பட்ட முறையில் தான் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அக்கட்டணம் இந்தியா விஷன் அமைப்புக்கே பயன்படுத்தப்பட்டுள்ளாதாகவும் கிரண் பேடி தெரிவித்திருந்தார்.  

இது குறித்து கருத்து தெரிவித்த அவ்வமைப்பினர், இதுபோன்று முறையற்ற வழியில் தொண்டு நிறுவனத்துக்கு நிதியாதாரம் ஏற்படுத்தத் தேவையில்லை என்றும், இது நல்ல நோக்கத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.  

கிரண்பேடியின் பதில் குறித்துக் கருத்துத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா, செலவழிக்காத விஷயத்துக்கு பணம் வாங்குவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், இவ்விஷயம் குறித்து கிரண்பேடி அளித்துள்ள விளக்கம் நியாயப்படுத்த முடியாதது என்றும் தெரிவித்தார்.  

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கருத்து தெரிவிக்கையில், ஊழலில் ஈடுபட்டவர்கள் அதனால் பெற்ற ஆதாயத்தை திருப்பித் தருவதன் மூலம் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதென்றால், ஏன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா சிறையில் இருக்க வேண்டும். பணத்தைத் திருப்பித் தந்துவிட்டு அவர் ஏன் வெளியில் வரக்கூடாது? என்று கேள்வியெழுப்பினார்.

No comments:

Post a Comment