புதுடெல்லி:வகுப்பு கலவரங்களை தடுக்கவும், சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்கவும் மத்திய, மாநிலங்கள் அளவில் ஆணையம் உருவாக்கப்படவேண்டும் என மத்திய அரசு நிறைவேற்றவிருக்கும் கலவர தடுப்பு மசோதா கூறுகிறது.
மத்திய அரசுடன் கலந்தாலோசித்து வகுப்பு கலவரங்களை தடுக்க அளவுகோல்களை வெளியிடவும், மறுவாழ்வு திட்டங்களை தயாராக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என வரைவு மசோதா தெரிவிக்கிறது.
சேர்மன், துணை சேர்மன் தவிர ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஆணையத்தில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும் எனவும், மீதம் 4 பேர் பெண்கள் எனவும் மசோதா கூறுகிறது. ஆணையத்தின் உறுப்பினர்கள் மீது எவ்வித வழக்குகளும் இருக்க கூடாது.
இதன் உறுப்பினர்களின் பதவிக்கான கால வரம்பு ஆறு வருடங்களாகும். சுயமாக வழக்கை எடுத்து விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. அரசும் அரசுசாரா நிறுவனங்களும் புரியும் குற்றங்களும் விசாரணை எல்லைக்கு உட்படும்.
பிரதமர் தலைவராக செயல்படுவார். எதிர்கட்சி தலைவர், உள்துறை அமைச்சர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். மத்திய செயலாளர் மட்ட அதிகாரி ஆணையத்தில் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
மேலும் மாநில, மாவட்ட மட்டங்களில் கணக்கெடுப்பு குழு உருவாக்கப்படும்.மாநில அளவில் முதன்மை செயலாளர் சேர்மனாகவும், மாவட்ட நீதிபதியும், ஏதேனும் மனித உரிமை குழுவின் பிரதிநிதி உறுப்பினராக இருப்பார். இக்குழு விசாரணை நடத்தி இழப்புகளை மதிப்பீடு செய்யும்.மறுவாழ்வு திட்டம் தயார்செய்யும். மாவட்ட அளவில் கலெக்டர் தலைவராக இருப்பார்.
ஏதேனும் ஒரு குழுவில் அங்கமாக இருக்கிறார் என்ற காரணத்தினால் நாட்டின் மதசார்பற்ற கொள்கைக்கு இழிவு ஏற்படுத்தும்விதமாக தனிநபருக்கோ, அவரது சொத்துக்களுக்கோ, காயமோ, ஆபத்தோ ஏற்படுத்தும் விதமான திட்டமிட்ட, எதேச்சையான எவ்வகையிலான செயல்களும் தொடர் செயல்களும் வகுப்புவாத தாக்குதலாக கருதப்படும். குழு என்பதன் பொருள் மத, மொழி சிறுபானமையினரோ அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினர்களோ ஆவர் என மசோதா தெளிவு படுத்துகிறது.
தனிநபருக்கோ, அவருடைய சொத்துக்களுக்கோ உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் மனசாட்சியின் படியும், பொருளாதார ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டால் அவரை பாதிக்கப்பட்டவராக கருதப்படும்.கலவரத்தை கட்டுப்படுத்தவும், அதனை தடுப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்காத உயர் போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், மேல் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத பணியாளர்கள் ஆகியோர் குற்றவாளிகளாக கருதப்படுவர்.
அமைப்புரீதியான கலவரம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.
எஸ்.ஐக்கு கீழ் மட்டத்திலுள்ள அதிகாரிகள் இக்குற்றங்களை விசாரிப்பர்.பாதிக்கப்பட்டவர்களும், சாட்சிகளும் அளிக்கும் வாக்குமூலங்களில் மாற்றம் செய்தால் அல்லது மேலதிகமாக ஏதேனும் சேர்த்தால் அத்தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மற்றும் போலீஸ் டெபுட்டி கமிஷனர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும்.வாக்குமூலத்தின் நகலை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் அல்லது தகவல் அளித்த நபர்களுக்கு அளிக்கவேண்டும்.இதர சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகலை பெற பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு.
No comments:
Post a Comment