Thursday 26 May 2011

’எனது மகன் அப்பாவி’-பி​ரான்சில் கைது செய்​யப்பட்ட நியாஸின் தாயார் பேட்டி


மதுரை:அல்காயிதாவுடன் தொடர்பு என குற்றம் சாட்டி பிரான்சு நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சார்ந்த நியாஸ் அப்துற்றஷீத் அப்பாவி என அவரது தாயார் பாத்திமா பேகம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:எனது மகனுக்கு தடைச்செய்யப்பட்ட இயக்கமான சிமி உடனோ அல்லது வேறு இயக்கத்துடனும் சம்பந்தமில்லை. ஒழுங்காக தொழுகையை பேணுவான் அவ்வளவு தான்.

ஒருபோதும் நியாஸால் தீவிரவாதியாக மாற இயலாது என என்னால் உறுதியாக கூற இயலும். ஏற்கெனவே, மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸார் கடந்த ஜனவரி மாதம் எங்களிடம் விசாரித்தனர். குடும்ப அட்டை, பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்தனர். அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிந்திருந்தால் அப்போது வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்திருக்குமா?


புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்த போது, என் மகன் இங்கு தான் தங்கியிருந்தார். அப்போது, இன்டர்நெட் மூலம் ஹபீப்புன்னிஸா என்ற பெண்ணை பார்த்ததாகவும் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார். ஆனால், நாங்கள் மறுத்துவிட்டோம். அதன் பிறகு குடும்பத்தினருடன் சற்று தொடர்பு அறுந்தது.

பின்னர் நியாஸின் நண்பர்கள் யார் என்பது குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. எந்தவிதமான குற்றச் செயலிலும் தொடர்பு இல்லாத என் மகனை பிரான்ஸ் போலீஸாரிடமிருந்து மீட்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு பாத்திமா பேகம் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் துவக்கத்தில் பிரான்சு நாட்டு போலீசார் அல் காயிதாவுடன் தொடர்பு எனக்குற்றம் சாட்டி 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் நியாஸ் அப்துற்றஷீத் ஆவார். இதனை மத்திய அரசு நேற்று முன்தினம் உறுதி செய்தது. கைது செய்யப்பட்ட பொழுது நியாஸிடமிருந்து இரண்டு பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும், அதில் ஒன்று போலி எனவும் பிரான்சு போலீஸார் கூறியுள்ளனர்.

2005-ஆம் ஆண்டு வரை மதுரை கரிமேட்டில் வசித்திருந்த நியாஸின் குடும்பம் பின்னர் மேலூரில் வசித்து வருகி
ன்றனர். நியாஸின் தந்தை அப்துற்றஷீத் கத்தரில் பணியாற்றிவருகிறார். அவரது இரண்டு சகோதரிகள் கத்தரில் வசிக்கின்றனர்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தீவிரவாதி என கைது செய்யப்பட்ட பெங்களூரை சார்ந்த டாக்டர் ஹனீஃப் பின்னர் குற்றமற்றவர் என தெரியவந்து அந்நாடு விடுதலை செய்தது. ஹனீஃபின் நிலைமை தான் நியாஸிற்கு ஏற்பட்டிருக்குமோ என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

நன்றி : Thoothuonline

No comments:

Post a Comment