11 May 2011
சென்னை:தமிழகம்,புதுச்சேரி, கேரளா, மே.வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்ட பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் வருகிற மே 13-ஆம் தேதி வெளியாகவுள்ளன. இம்மாநிலங்களில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை (Exit poll) பிரபலமான தொலைக்காட்சி சேனல்கள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டன.
தமிழ்நாட்டில் இழுபறி ஏற்படுமா?
சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 120 முதல் 132 இடங்களும், திமுக கூட்டணிக்கு 102 முதல் 114 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும் போது திமுக கூட்டணி ஒரு சதவீத வாக்கை இழந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்குகள் அதிகரித்திருப்பதாகவும் சி.என்.என்.-ஐ.பி.என். தெரிவித்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கணிப்பில், திமுக கூட்டணி 115- 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 105- 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவிஜி நியூஸ்- சி வோட்டர் இணைந்து நடத்திய கணிப்பில், தமிழகத்தில் 234 பேரவை தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்கு வங்கி குறைந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காங்.கூட்டணி ஆட்சி?
140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப் பேரவையில், ஆளும் இடதுசாரி முன்னணிக்கு 69- 77, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 63- 71 இடங்களும் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 85-92 இடங்களிலும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49- 57 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 83 முதல் 91 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49 முதல் 57 இடங்களையும் கைப்பற்றக் கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 72 முதல் 82 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும் என ஏசியா நெட் தொலைக்காட்சி சேனல் நடத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது. முதல்வர் பதவிக்கு தகுதியானவர் அச்சுதானந்தன் என 40 சதவீதம் பேரும், காங்கிரஸின் உம்மன்சாண்டி என 37 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்காளத்தில் முடிவுக்கு வருமா 34 ஆண்டுகால இடதுசாரி ஆட்சி?
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 222- 234 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்றும், இடதுசாரி முன்னணிக்கு 60- 72 இடங்கள் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு 210-220 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 65- 70 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 184 முதல் 192 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 56 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமில் கூட்டணி ஆட்சி?
அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 64- 72 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் கண பரிஷத் 16 முதல் 22 இடங்களும், எ.யு.டி.எஃப் 11 முதல் 17 இடங்களும், பா.ஜ.க 11 இடங்களும் கைப்பற்றும் என அக்கணிப்பு கூறுகிறது.
ஆனால், அஸ்ஸாம் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது. ஆளும் காங்கிரசுக்கு 41 முதல் 45 இடங்களும், பாஜகவுக்கு 14 முதல் 18 இடங்களும், அஸ்ஸாம் கண பரிஷத் கட்சிக்கு 31 முதல் 35 இடங்களும் கிடைக்கக்கூடும்.
இதனால், ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கணிப்பின்படி, காங்கிரஸ் 41- 47 இடங்களிலும், பாஜக 16- 18 இடங்களிலும், அஸ்ஸாம் கண பரிஷத் 13- 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
உண்மையான முடிவுகளுக்காக மே-13-ஆம் தேதி வரை காத்திருப்போம்.
No comments:
Post a Comment