
விடுதலை வீரர் வித்தல்பாய் பட்டேல் அன்றைய பம்பாய் நகரத்தில் 1917ஆம் ஆண்டு கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து மாகாணங்கள் பலவும் சட்டங்கள் இயற்றினர். ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் ஆரம்பக் கல்விச் சட்டத்தை 1920ஆம் ஆண்டில் நிறைவேற்றி செயல்படுத்தத் தொடங்கியது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். ஆனால் கல்வி இலவசமல்ல. கட்டணம் கட்ட இயலாதவர் பெரும்பான்மையோர் ஆனதால் கல்வி பரவலாக அனைத்து மக்களையும் சென்று அடையவில்லை. விடுதலை இயக்கத்தில் இலவசக் கட்டாயக் கல்வி ஒரு முக்கிய இடம் கொண்டிருந்தது. விடுதலை பெற்ற பின்னர் அமைக்கப்பட்ட அரசியல் சட்ட நிர்ணய சபையின் நகல் சட்டத்தில் இலவச, கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக இடம் பெற்றது. ஆனால் நிதி, பிற ஆதாரங்கள் போதாமையை காரணம் கட்டி அதனை அரசியல் சட்டத்தின் நெறிக் கொள்கைப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பத்தாண்டுகட்குள் அடையப் பெற வேண்டிய இலக்காக அறிவிக்கப்பட்டது. குடியரசாக 1950இல் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரையில் கல்வி அனைவருக்கும் வழங்கப்படாது உள்ளது.
அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் 1993ஆம் ஆண்டில் உண்ணிக்கிருஷ்ணன் வழக்கில் கண்ணியமான வாழ்க்கைக்கு கல்வி அவசியம் என்று கூறி பதினான்கு வயது வரையில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தது . இதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தம் 2005ஆம் ஆண்டில் ஷரத்து 21ஏ என்ற புதிய ஷரத்தை நாடாளுமன்றம் இயற்றியது. கல்வியை அரசு நிர்ணயித்த வண்ணம் வழங்க வகை செய்ததால் இது ஒரு நிபந்தனைக்குட்பட்ட உரிமையாகவே அமைந்துள்ளது முழு உரிமையல்ல என்பது ஆளும் வர்க்கத்தினருக்கு ஏழை எளியவர்க்குக் கல்வி அளிக்க தயங்குவதைப் பார்க்கலாம். நமது அரசியல் சட்டத்தில் நிபந்தனைக்குட்பட்ட உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி உரிமை ஒன்றே என்பது வெட்கக்கேடு. கல்வி உரிமைச் சட்டத்தில் நிறைகள் சில, குறைகள் பல. சட்டம் இயற்றியவர்களுக்கு இந்திய கிராமப் புறங்களைப் பற்றிய புரிதல் மிகக் குறைவு என்பது புலப்படுகின்றது.
ஆனால் இதனைத் தொடக்கமாகக் கொண்டு சீரிய மாற்றங்களைக் கொணர முற்பட வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் பணக்கார இந்தியா, ஏழை இந்தியா ஆக இரு வகை இந்தியாக்களை அங்கீகரித்துள்ளது. பள்ளிகளில் இவ்வேறுபாடுகளை ஏற்படுத்தி பாகுபாடுகளை நிரந்தரப்படுத்துவது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்தானது. பள்ளிகள் சமத்துவத்தை உருவாக்கும் ஒரு பயிற்சி நிலையம் என்ற கோட்பாடு காற்றில் விடப்பட்டுள்ளது. கட்டணப் பள்ளிகள் அருகில் உள்ள நலிந்தவர்க்கு 25% இடம் ஒதுக்க வேண்டும் என்பது சமத்துவத்தை உருவாக்காது. அவ்விலவச இடங்களுக்கானத் தொகையை அரசு அந்நிறுவனங்களுக்கு வழங்கும் என்பது மக்கள் பணத்தை கல்வி வணிகர்களுக்கு வாரிவழங்குவதாகும் தொழில் நிறுவனங்கள் தங்கள் கணக்கு விவரங்களை ஊடகத்தில் வெளியிட வேண்டும் என்பது சட்டம். ஆனால் கல்வி வணிகர்களது கணக்கு வழக்குகள் அரசின் தணிக்கைக்கும் உட்படாது, அவற்றை வெளியிடவும் இடமில்லை.
இக்குறை நீக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளியும் தங்கள் வரவு செலவு அறிக்கையை வெளியிட வகை செய்தல் வேண்டும். உண்மையில் சட்டத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமெனில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும். நிதிப் பற்றாக்குறை காரணமாக எவ்விதத் தடங்கலும் ஏற்படாதிருக்க நடுவணரசு மாநிலங்களுக்கு போதுமான நிதி வழங்கிட வேண்டும். இது குறித்து நிதிக் கமிஷனிடம் முறையீடு செய்ய வேண்டுமென்று சட்டம் கூறிய பொழுதும் இன்று வரை நடுவணரசு எம்முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் பல மாநிலங்கள் தங்களால் கூடுதல் நிதி ஒதுக்கிட இயலாதென்பதால் நடுவணரசு நிதி அளிக்கும் வரை சட்டத்தை அமல் செய்ய மாட்டோம் என்று சொல்வதும் சட்டம் வந்தும் பயனேதும் இல்லை என்பதே நிலை.
இயன்றவரை தாய்மொழிவழியில் கல்வி அளிக்க வேண்டுமென்று சட்டம் கூறுகையில் தாய்மொழிவழிக் கல்வியினின்று யார் விலக்கு பெறுவார்கள், அவர்கள் வட்டார மொழியில் கற்பார்களா அல்லது அயல் மொழிவழியில் கல்வி பெறவே இந்த விதித் தளர்ச்சி இடம் பெற்றுள்ளதோ என்பது தெளிவாக்கப்பட வேண்டும் சட்டம் பல பொறுப்புகளை உள்ளூர் பஞ் சாயத்துகளுக்குக் கொடுத்துள்ளது. ஆனால் அவை எவ்வாறு அப்பணிகளை மேற்கொள்ள முடியும் என் பதைப் பற்றி சிந்தித்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாடு நகல்விதிகளில் பஞ்சாயத்துகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு அரசு அதிகாரிகளிடம் அனைத்துப் பொறுப்புகளையும் அளித்துள்ளது மக்கள் சக்திக்கு விரோதமானதாகும்.
சுருங்கக்கூறின் சட்டம் எளியவர்க்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நிறைய மாறுதல்கள் தேவைப்படும். அதற்கு வேண்டிய அரசியல் உறுதி இன்றைய ஆளும் கட்சிக்கு இல்லாததால் மக்கள் விழித்தெழுந்து போராடத் தயாராக வேண்டும். அவர்களை அணி திரட்டும் கடமையும் பொறுப்பும் இளைஞர் சமுதாயத்திற்கு உண்டு. கடந்த கால வரலாற்றினைப் பார்க்கையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அப்பணியினை மேற்கொள்ளும் திறன் பெற்றது என்று அறுதியிட்டு கூறலாம்.
No comments:
Post a Comment