காமாலைக் கண்ணால் பார்த்தால் எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும் என்பார்கள், அதேபோல, கடந்த 64 ஆண்டுகளில் இந்தியாவில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை என்று யாராவது சொன்னால், அது காமாலைப் பார்வை என்றுதான் கூறவேண்டும். நாம் முன்னேறியிருக்க வேண்டிய அளவுக்கு முன்னேறவில்லையே தவிர, இந்தியாவின் முன்னேற்றம் அபரிமிதமானது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
நமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக இருப்பவை, மக்கள் மத்தியில் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும், நமது நியாயமான உரிமைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் இருப்பதும், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் "சிவப்பு நாடா' கலாசாரமும்தான். இவை இரண்டுமே, காலனிய அடிப்படைச் சிந்தனைகள்தான் என்பதை 64 ஆண்டுகளாகியும் நாம் உணர்ந்து அதிலிருந்து விடுபடாமல் தொடர்வதுதான் துர்பாக்கியம்.