Thursday, 12 May 2011

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு


freedom fight
இந்திய சுதந்திரம் என்றாலே மகாத்மா காந்தி தான் நம் அனைவரின் மனதில் தோன்றுவார். இதற்கு அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் மற்றும் யுக்திகள் மறுப்பதற்கும், மறைப்பதற்கும் இல்லையென்றாலும். மறுபக்கம் ஒரு தனி மனிதன் மட்டும் தான் போராடி சுதந்திரம் பெற்று தந்தார் என்று நினைப்பது, நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கசாப்பு கடைக்கு காந்தியின் பெயர் சூட்டுவதற்கு சமம் (அப்படிப்பட்ட அறியாமை).
ஏனென்றால், இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது பலரின் கூட்டு ஒத்துலைப்பினாலும், விடா முயற்சியாலும், பலரின் உயிர் தியாகத்தினாலும் கிடைத்தது என்பதனை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல தியாகிகள், மாவீரர்கள் என்று பலரும் போராடி, உயிர் நீத்த பின்னரே, இன்றைய சுதந்திர இந்தியா அயல் நாட்டவரின் அடிமை தளத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சுதந்திரம், ஒரு தனி மனிதானலோ அல்லது ஒரு தனி மதத்தவராலோ கிடைத்தது என்று கூறினால், அது பச்சப் பொய்யாகவே தான் இருக்க முடியும். வரலாற்றை சற்று புரட்டி பார்த்தல், இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமும், பொருள் வசதியும் அளித்தவர்களில் இஸ்லாமியர்களே முதல் இடம் வகிப்பார்கள். இதில் வரலாற்றில் வெளிவந்தது சில பெயர்கள், மறைக்கப்பட்டதோ பல பெயர்கள்.
பின்னர், வரலாற்றையும் சினிமா கதைகளாக கயவர்கள் இன்றும் மாற்றிக்கொண்டு வருகின்றனர். இந்த சுதந்திர போராட்டத்தில் பல மாற்று மத சகோதரிகளும் தங்கள் இன்னுயிரை நீத்து அம்மதத்தைச் சேர்ந்த பெண்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளனர். அவர்களின் நினைவுகளும், அடையாளங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. மாதம் தோறும், வருடம் தோறும் அவர்களை போற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால், இவ்வீரமிகு போராட்டத்தில் முஸ்லிம் பெண்களும் தங்கள் வீரத்தை, உயிர் தியாகத்தை, அறிவு பலத்தை  பயன்படுத்தினார்கள் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? மிஞ்சிபோனால், முஸ்லிம் சகோதரிகள் அனைவரும் கேள்விப்பட்டதும், படித்ததும், இஸ்லாத்தின் வரலாற்றில் – போரில் நோய்வாய் பட்டவர்களுக்கும், தாக்கப்பட்டவர்களுக்கும் சஹாபி பெண்மணிகள் உதவியது மட்டும் தான் இருக்க முடியும்.
அதைக் கேட்டு ஏங்கியவர்களும், தவித்தவர்களும், உணர்ச்சி வசப்பட்டவர்களும் நம்மில் அதிகம் இருக்கின்றனர். நம் சொந்த இந்திய திருநாட்டில் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்திற்காக உழைத்து, உயிர் நீத்த பல முஸ்லிம்களின் பெயர்களும், சாதனைகளும், இதுவரை பரவலாக வெளிவரவும் இல்லை, பதியப்படவுமில்லை. வரலாற்று புத்தகத்தில் தங்களுக்கென்று ஒரு இடம் கிடைக்காத துரதிஷ்டவாதிகளாக இன்றைக்கும் அவர்கள் இருக்கின்றனர்.
இந்த சுதந்திர இந்தியவிற்காக பாடுபட்ட பலரின் பெயர்களை கேட்டு இருப்போம், பெருமை பட்டு இருப்போம், அதனை மீண்டும் உமிழ்வதல்ல இக்கட்டுரையின் நோக்கம். பரவலாக அறியப்படாத, வரலாற்றில் மறைக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் சுந்தந்திர தாகத்தையும், அவர்கள் உருவாக்கிய தாக்கத்தையும் தான் இங்கு நாம் காணப் போகிறோம்.
எனக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, அது சகோதரிகளுக்காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட அருமையான நிகழ்ச்சி. அதில் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர், ஒரு அருமையான கேள்வியை எங்கள் முன்வைத்தார்.
அக்கேள்வியானது,
“இந்தியாவின் சுதந்திரத்தில் பங்கெடுத்த முஸ்லிம்  பெண்களின் பெயர்களில் யாரவது ஒருவரின் பெயர் தெரியுமா? என்று, அந்த அறையில் கிட்டத்தட்ட என்னுடுடன் சேர்த்து 50-க்கு மேற்ப்பட்ட சகோதரிகள் இருந்தனர், அறை முழுவதும் நிசப்தம், ஒருவர் கூட பதில் உரைக்கவில்லை. இந்தியாவின் சுதந்திரத்தில், பங்கெடுத்த முஸ்லிம் பெண்களா! என்று எங்களுக்குள் ஒரு ஆச்சரியகுறியை போட்டுக்கொண்டு விடை தெரியாமல் கூனி, குறுகி இருக்கையில் அமர்ந்து இருந்தோம், ஆவலோடு அவரின் பதிலுக்காக. அந்த ஆவல் தான் இன்று கட்டுரையாக உருவெடுத்துள்ளது.
இந்தியா திருநாட்டில் முஸ்லிமாக பிறந்து பல வருடங்கள் வாழ்ந்து, நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்று மட்டும் தான் தெரியும், அதற்க்கு பின் உள்ள பல புதைக்கப்பட்ட உண்மைகளை இது வரை நம்மில் யாராவது அறிய முயற்சி எடுத்து இருப்போமா, இல்லை வரலாற்றை புரட்டி தான் பார்த்து இருப்போமா?
எந்த ஒரு சமூகத்திற்கு தன் சொந்த வரலாறு தெரிவில்லையோ, அந்த சமூகம் மிக எளிதாக அழிக்கப்படும் என்று மால்கம்-X கூறியது தான் நினைவிற்கு வருகிறது. நாம் நம் இந்திய வரலாற்றை அறிய முயற்ச்சிக்காதது, இன்று முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற மாயை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது. தன்னை தீண்ட வந்தால் “வாயில்லாத ஐந்தறிவு ஜந்து” கூட தன்னை காத்துக் கொள்ள தன்னால் இயன்ற வரை முயற்சி செய்யும்.
ஆனால் முஸ்லிம் மக்களோ யாரை யார் தீவிரவாதி, பயங்கரவாதி என்று சொன்னால் நமக்கென்ன, நாமும்  நம் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்ற சுய நலத்தோடு பிளவுபட்டு பல இயக்கங்களாக பிரிந்துக் கிடப்பதும், தாக்கப்பட்டு இருப்பதும், பாதிக்கப்பட்டவர்களும் நம் குடும்பத்தாரை சேர்ந்தவர் இல்லையே என்ற ஒரு அசட்டு சந்தோசம். எங்கே எதிர்த்து போராடினால் அல்லது பதில் உரைத்தாலோ நம் உயிரை எடுத்து விடுவார்களோ என்ற அச்சம்.
நம் சமூகத்தை ஆழ்வதற்கு, நாம் நம் வரலாற்றை அறியாததே காரணம். ஒரு அற்ப காரணத்திற்காக நம் உயிர் போவதை விட இந்த உலகில் பிறந்து, எதையாவது சாதிக்க முடியவில்லை என்றாலும், நம் உயிர் நம்மை படைத்த இறைவனுக்காகவும், அவனின் சமுதாயத்துக்காகவும் போனால் மனிதனில் சிறந்த மானுடனாய் இவ்வுலகிலும், மறுவுலகிலும் போற்றப்படுவோம் என்பது அவர்களுக்கு தெரியத்தான் செய்கின்றது.
இப்படிப்பட்ட ஒரு தருவாயில், இந்த திருநாட்டில் உள்ள மக்களும், சமுதாயமும் சுதந்திரமாக மேலை நாட்டவரின் அடிமை தளத்தில் இருந்து மீட்டெடுக்க போரடிய வீரமிக்க முஸ்லிம் சமூகப் பெண்களின் வரலாற்றை ஒரு குறுகிய தொகுப்பாக இங்கு காணப் போகிறோம்.
பேகம் ஹஜ்ரத் மஹல்-இவர் ஒத் மாநிலத்தின் ராணி, நவாப் வாசித் அலி ஷாவின் மனைவியுமாவர். ஒத் என்பது இப்போது உள்ள உத்திர பிரதேச மாநிலம் ஆகும். இந்தியா பிரிடிஷ் காரர்களால் அடிமை பட்டுக் கிடந்த காலத்தில்,  அவர்களின் அடிமை தளத்தில் முழு மாநிலமும் உறைந்த நிலையில் இருந்த பொழுது துணிந்து எழுந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்.
பேகம் என்பது இவரது பெயர், “ஹஜ்ரத் மஹல்” என்பது மற்றவர்களால் போற்றி வழங்கப்பட்ட பெயர். அம்மாநிலத்தை ஆண்டு கொண்டு ராஜாவாகிய அவரது கணவரை பிரிடிஷ்காரர்கள் கொல்கத்தாவுக்கு நாடு கடத்திய பிறகு, அம்மாநிலத்தையே தன் கையில் எடுத்து ஆண்டவர். அம்மாநிலத்தை காக்க தன்னுடைய மகன் பிரிஜிஸ் காதரை மன்னனாக்கிவிட்டு, நாட்டை காப்பதற்காக அவர் சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கினார்.
இந்தியாவின் முதலாம் உலக போரின் போது முக்கிய பெறும் தலைவர்களுடன் இணைந்து பல சாதனைகளை செய்து உள்ளார். ஒரு சமயம் பிரிட்டிஷ் தலைவர்களில் ஒருவரான சர் ஹென்றி லாரன்ஸ் என்பவரையும், அவரை சுற்றி இருந்த மற்றும் சில அதிகாரிகளையும் வளைத்து பிடித்து ஒரு தனி பெண்மணியாக எதிர் கொண்டு, அவர்களுடன் நடந்த போராட்டத்தில் பேகம் ஹஜ்ரத் மஹல் சர் ஹென்றி லாரன்ஷை தன் கையால் சுட்டு வீழ்த்தினார்.
பின்னர் பிரிட்டிஷ்காரர்களின் சார்பில் ஜெனரல் ஹவ்லாக் என்பவரின் கண்காணிப்பில் மீண்டும் அம்மாநிலத்தை கைப்பற்ற முயன்று பெரும் தோல்வியை தழுவினார்கள். இறுதியில் சர் கேம்பால் தலைமையில் லக்னவை மீண்டும் பிரிட்ஷ்காரர்களே கைபற்றினர். இந்த சூழ்நிலையில் பேகம் ஹஜ்ரத் மஹல் பிரிட்ஷ்காரர்களால் பின் வாங்கிக் கொள்ளும் படி வற்புருத்தப்பட்டார். ஆனால் வீரப் பெண்மனியான அவரோ இவர்கள் கொடுக்கும் “பொது மன்னிப்பில்” வெளி வந்து மீண்டும் இவர்களின் அடிமைத்தனத்திற்கு ஆளாவதை விட இங்கு இருந்து இடம் பெயர்வது மேல், என்று முடிவு எடுத்த துணிச்சல் மிக்க பெண்மணி.
அஜிஜன்-இவரை என்னவென்று புகழ்வது, தமிழ் அகராதியில் இத்துணை தைரியமிக்க மகத்தான பெண்ணுக்கு என்ன வார்த்தை உள்ளது என்றால் கிடைக்குமா என்று தெரியவில்லை தைரியத்தை தன் இரத்தமாக கொண்டு வாழ்ந்தவர். லக்னோவில் பிறந்த இவர் 1832-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நானா ஸாஹிப் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து மக்களும் ஒன்றினைந்து போரடா வேண்டி, இந்து முஸ்லிம் மக்களை ஒற்றுமைக்காக அழைத்த போது  நாட்டிற்காக இவர் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
தன் ஒருத்தியின் வாழ்க்கை பல பேருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவர். பெண்கள் அனைவரையும் போருக்கு தயார்படுத்தியவர், பெண்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொடுத்தவர். பிரிட்ஷ்க்காரர்களின் ரகசியங்களை ஒன்று திரட்டி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அனுப்புவராக பணி புரிந்தவர். இறுதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை சிறை பிடித்த போது இவர்களுக்கு எதிராக செயல்பட்டதை துணிச்சலோடு ஒப்புக்கொண்டு, பிரிட்டிஷாரின் மன்னிப்பை ஏற்க மறுத்து, உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முழக்கமிட்ட வீர மங்கை.
பி அம்மா (அபாடி பேகம்)-இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் கைபற்றிய போது, மிக துணிந்து போராடிய பெண்மணிகளில் இவரும் ஒருவர். இவருடைய மகன் முகமது அலி 1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பொது மன்னிப்பில் சிறையை விட்டு வெளியே வருவதாக கேள்விபட்ட பி அம்மா உரைத்த பதில், “முஹம்மது அலி வெறும் சாதாரண மனிதன் அல்ல, அவன் இஸ்லாத்தின் மகன், அவனால் ஒரு போதும் மற்றவர்கள் கொடுக்கும் மன்னிப்பு பிச்சையில் வருவதை சிந்திக்க முடியாது. ஒரு வேலை அவன் அதை விரும்பினாலும் இந்த வயது முதிர்ந்த தாயின் கைகள் பலம் இழந்து கிடந்தாலும் அவனை எதிர் கொள்ள இது பலம் பெறும்” என்று உரைத்தவர்.
அவர் அயல் நாட்டின் பிடியில் இருந்து தன் தாய்நாட்டை காப்பற்ற அயராது உழைத்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் மிக துணிந்து செயல்ப்பட்டவர். அவர்கள் அயல் நாட்டின் ஆடைகளை அணிவதை தவிர்த்து மற்றவர்களையும் காதி துணியை அணிய வைக்க முயற்சித்தவர். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பெரிதும் போராடியவர், இத்துணை போராட்டத்திலும் தன்னுடைய ஈமானை ஒருபோதும் தளர விடாதவர்.
ஜுபைதா தாவூதி-இவர்கள் மௌலான ஷாபி தாவூதி அவர்களின் மனைவி, பீகாரை சேர்ந்தவர். பிரிட்டிஷ்க்கு எதிராக “துணிச்சலை” தங்கள்  ஆடையாக உடுத்தி செயல்பட்டவர். மேலை நாட்டவர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் காரர்களுக்கு முன் தன் எதிரித்துவத்தை காட்ட தீ வைத்து கொளுத்தியவர். பிரிடிஷ்க்காரர்களுக்கு எதிராக நடந்த அனைத்து கூட்டங்களிலும் பங்கெடுத்து, மற்ற பெண்ககளுக்கும்  துணிச்சலை வளர்க்க தன்னை  முன் மாதிரியாக செயல்படுத்திக் கொண்டவர்.
சதாத் பனோ கிச்லேவ்-இவர் பஞ்சாபை சேர்ந்தவர். மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக சுதந்திர போராட்டத்திற்காக பல கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியவர். சாதாரண பெண்மணியாக இருக்கும் நாம் நம் கணவர் சத்தியத்தின் பாதையில் போராடியோ அல்லது இறை நேர்மைக்காகவோ சிறையில் அடைக்கப்பட்டார் என்று கேள்வி பட்டால் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து நாம் வருந்துவதோடு அல்லாமல் நம் குழந்தை, பெற்றோர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி, தனிமையில் வீழச் செய்வோம்.
1920-ஆம் ஆண்டு சதாத் பனோ கிச்லேவ் தன் கணவர் டாக்டர்.கிச்லேவ் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்ட  அவர் தெரிவித்தது என்ன தெரியுமா? “அவர் தன் நாட்டுக்காக கைது செய்யப்பட்டதை எண்ணி நான் மிகவும் பெருமை படுகிறேன், அவர் ஒருவரின் வாழ்க்கையை கொடுத்து ஆயிரம் பேரின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளார்” என்று ஒரு துளிக் கூட வருத்தம் கொள்ளாமல் பெருமிதம் கொண்டார். அந்த கண்ணியமிக்க பெண்மணி. இவர் அரசாங்கத்தின் அத்து மீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தவர், டாக்டர். கிச்லேவ்-ஆல் நிறுவப்பட்ட “ஷுவராஜ் ஆசிரமத்தை” தன் கணவனுக்கு பின் வழி நடத்தி சென்ற பெருமையை கொண்டவர்.
ஜுலைகா பேகம்-இவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனைவியாவார், மிகவும் தைரியமிக்க பெண்மணி. சுதந்திர போராட்டத்தில் காந்தியாலும், நேருவாலும் மிகவும் மதிக்கத்தக்க, உன்னதமான மனிதன் அபுல் கலாம் ஆசாத்தை 1942-ல் கைது செய்யப்பட்ட போது,  ஜுலைகா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
அதில் “என் கணவர் ஒரு வருடம் சிறைத் தண்டனை மட்டுமே  பெற்றுள்ளார். அவர் தன் நாட்டின் மீது வைத்து இருந்த பற்றுக்கு, அவருடைய பக்குவப்பட்ட மனதிற்கும்  நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்த தண்டனையே, ஆனால் நியாயம் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இன்று முதல் இந்த வங்காளத்தின் முழு கிலாபாத் அமைப்பையும் நானே பொறுப்பேற்று நடத்துவேன்”  என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தன் கணவனின் பொறுப்பை மிக எளிதாக தனதாக்கி கொண்டு தன்னுடைய பங்கையும் சுதந்திரத்திற்காக முழுமையாய் வெளிக்கொணர்ந்தவர்.
ரஜியா காத்தூன்-பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்ற வங்க தேசத்தின் முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர், இதனால் அவர்களை கைது செய்து களப்பணி என்ற இடத்தில அடைத்து வைத்தனர். அவருடைய கடைசி மூச்சை அவர் அங்குதான் நீத்தார்.
மேலே குறிப்பட்டவர்களை தவிர நிசதுன்னிஷா பேகம், அக்பரி பேகம், அஷ்கரி பேகம், ஹபீபா, ரஹீமி, அமினா குரைஷி, பாத்திமா குரைஷி, அமினா தயப்ஜி, பேகம் சகினா லுக்மணி, சாபியா சாத், பேகம் குல்சூம் சயானி, அஸ்மத் அரா காத்துன், சுகரா காத்துன், பீபி அமதுள் இஸ்லாம், பாத்திமா இஸ்மாயில், சுல்தானா ஹயாத் அன்சாரி, ஹழ்ரா பேகம் மற்றும் ஜுஹரா அன்சாரி இவர்களில் பல பேர் சிறையில் இருந்தும் பல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். இவர்களின் மகத்தான போராட்டத்தாலும், வீரத்தாலும் இன்று நம் சுதந்திர இந்தியாவை காண முடிகிறது.
இன்று இப்போதைய சூழ்நிலையில் நமது பெண் மக்களோ கணவன் வயது தளர்ந்து இந்த இம்மையை விட்டு போகும் வரை அவரது துணை எதிர்பார்த்தே வாழ்கின்றனர். இன்று பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்கள் எந்த ஆண் துணையுமின்றியே வாழ்கின்ற சூழ்நிலையிலேயே உள்ளனர். எண்ணி பாருங்கள் பெண்களே, இன்று குஜராத்திலும், காஷ்மீரிலும், இஸ்ரேலிலும் நடக்கும் வன்முறை நாளை நம் வீட்டை எட்டி பார்க்காது என்பதற்கு என்ன ஆதாரம், எப்படி நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பற்ற போகிறோம்.
இப்படி பட்ட இந்த சூழலில் நாம் எத்தனை தைரியத்துடன் இந்த உலகத்தை ஆட்கொண்டு இருக்கும் மனித உருவில் இருக்கும் சில மனித ஜந்துக்களை (சைத்தான்களை)  கையாள கற்றுக்கொள்ள வேண்டும். நம் வரலாற்றில் சாதித்து இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சாஹாபக்களுக்கு உதவியாக இருந்த எத்தனையோ சாஹாபி பெண்மணிகள் உள்ளனர். அவரில் ஒருவரான ஹபிப் (ரலி) அவர்களின் மனைவியின் வரலாறு நமக்கெல்லாம் மிக சிறந்த எடுத்துக்காட்டு .
மேலே குறிப்பிட்ட அனைத்து செய்திகளும், பெண்களாகிய நமக்கு மிக பெரிய எடுத்துக்காட்டும், முன்னுதாரனமுமாகும். நாம் வாழும் நாடும், இந்த உலகும் அத்தனை எளிதல்ல. பெண்களாகிய நம்முடைய சிந்தனையும், சில அடக்குமுறைவாதிகளின் சிந்தனையும், பெண்கள் சமைப்பதற்கும், வீட்டு வேலை செய்வதற்கும் தான் தேவையானவர்கள் என்று உள்ளது. ஆனால் நபி(ஸல்) அவர்களும் அவரை பின்பற்றிய சஹாபாக்களும் பெண்களின் நல்ல ஆலோசனைகளை கேட்டும் அவர்களின் உரிமைக்கு இடம் கொடுத்துமே வாழ்ந்து உள்ளனர்.
பெண்கள் என்றால் “பூ”-வுக்கு இணையானவர்கள் என்பார்கள் நம் மூதாதையர்கள், ஆனால் அந்த  பூ புயலாக மாறினால் நாடும் வீடும் தாங்காது, தேவைபட்டால் இந்த பூ போன்ற பெண்கள் “அடுப்பங்கரைக்கும் மட்டும் கத்தியை எடுப்பவர்கள் அல்ல மாறாக அநீதியை களையெடுக்கவும் கத்தி எடுப்பார்கள்” என்பதை மேற்க்கண்ட அனைத்து பெண்களும் நிருபித்து உள்ளனர்.
இந்த நாட்டிலும், சமுதாய வளர்ச்சியிலும் பெண்களுக்கும் மிக பெரும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து கோழைத்தனத்தை விட்டு இனி வரும் சமுதாயத்திற்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாகவும், வழிக்கோலாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும். பெண்களின் அன்றைய தியாகத்தை நினைவூட்டும் இக்கட்டுரை, நம் இன்றைய இயந்திர வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையுடன்! இன்ஷா அல்லாஹ்…..
மின்-தீன்
   

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 31 முஸ்லிம் மாணவர்கள் வெற்றி

UPSC
புதுடெல்லி:இந்திய குடியுரிமை பணிகளுக்கான(சிவில் சர்வீஸ்) 2010 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளில் வெற்றிப்பெற்ற 920 மாணவர்களில் 31 பேர் முஸ்லிம் மாணவர்களாவர்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகத்தைச் சார்ந்த திவ்யதர்ஷினி என்ற மாணவி இந்தியாவிலேயே முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் 3-வது,4-வது மற்றும் 8-வது ரேங்குகளை தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களே பெற்றுள்ளனர்.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படும்.
 2010-ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தேர்வில், முதல்நிலைத் தேர்வு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதிலிமிருந்து 3.48 லட்சம் பேர் எழுதினர்.  2010 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 2,400பேர் தேர்ச்சி பெற்று,நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
 இதில் காலிப் பணியிடங்கள் உள்ள அளவிற்கேற்ப 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் முஸ்லிம் மாணவர்கள்.இதில் சதவீதம் 3.36 ஆகும்.இதில் தாரிக் 35-வது ரேங்கையும், மன்னான் அக்தர் 55-வது ரேங்கையும், மிர் முஹம்மது அலி 59-வது ரேங்கையும் பெற்றுள்ளனர். வெற்றிப் பெற்ற முஸ்லிம் மாணவர்களும் அவர்கள் பெற்ற ரேங்க் விபரமும் பின்வருமாறு:
Sl.No.  Rank               Roll No.                      Name
1.         35                    033523                       Tariq Thomas
2.         55                    048876                       Mannan Akhtar
3.         59                    123121                       Mir Mohammed Ali
4.         145                  000113                       Danish Ashraf
5.         169                  071832                        Mohammad Imran
6.         180                  059148                        Syed Abid Rasheed Shah
7.         187                  351125                        Zafar Ajmal Kidwai
8.         208                  001032                        Adil Khan
9.         226                  020180                        Mohammed Ali Shihab A
10.       245                  004221                        Abid Khan
11.       249                  312359                        Anam Benish
12.       266                  392074                        Posu Babu Alli
13.       306                  037793                        Ahtesham Ur Rahman Khan
14.       341                  047571                        Gulzar Ahmad Wani
15.       363                  080609                        Riyaz Iqbal
16.       404                  284659                        Ilyas K P A
17.       408                  016973                        Anjum Ara
18.       431                  022617                        N Mohammed Ali
19.       450                  351154                        Shaikh Aminkhan Yasinkhan
20.       460                  159666                        Syed Wasif Haider
21.       469                  016500                        Sahil Seth
22.       527                  068608                        Mohsina Tabassum
23.       572                  320065                        Ovessa Iqbal
24.       585                  008447                        Abid Hussain Sadiq
25.       611                  011477                        Ahmed Muyeen Farooq
26.       655                  072429                        Imran Ahmad Siddiqui
27.       737                  330454                        Mohd Yakoob Shekh
28.       740                  332527                        Jusuf Kabir Ansari
29.       794                  000686                        Mohd Aija
30.       795                  320235                        Shiraz Daneshya
31.       857                  117036                        Azhar Jamal
  

Wednesday, 11 May 2011

பாப்ரி மஸ்ஜித்:அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை வரவேற்கத்தக்கது-பாப்புலர் ஃப்ரண்ட்

presided-k-m-sheriff
புதுடெல்லி:இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை மூன்றாக பங்குவைத்து அளிக்கவேண்டும் என கூறிய அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை விசித்திரமானது என குறைகூறிய உச்சநீதிமன்றம் வழக்கை மறுபடியும் விசாரிக்கவேண்டும் என கருத்துத்தெரிவித்துள்ளது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
வகுப்புவாத சிந்தனையுடன் அளிக்கப்பட்ட பாரபட்சமான அலகபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பைக்குறித்து கவலைக்குள்ளான மதசார்பற்ற வட்டாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ஆறுதலை அளிக்கும்விதமாக அமைந்துள்ளது.பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் தொடர்பான வழக்கில் 60 ஆண்டுகளுக்கு பிறகு அலகபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாரபட்சமானதும், நீதியற்றதுமாகும்.
நீதியை தாமதிப்பது நீதியை மறுப்பதற்கு சமம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விரைவாக விசாரணையை நடத்தி தீர்ப்பு அளிக்கும் என நம்புவதாக கே.எம்.ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.  

தமிழகம்:வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இழுபறி

tamilnadu
சென்னை:தமிழகம்,புதுச்சேரி, கேரளா, மே.வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்ட பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் வருகிற மே 13-ஆம் தேதி வெளியாகவுள்ளன. இம்மாநிலங்களில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை (Exit poll) பிரபலமான தொலைக்காட்சி சேனல்கள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டன.
தமிழ்நாட்டில் இழுபறி ஏற்படுமா?
சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 120 முதல் 132 இடங்களும், திமுக கூட்டணிக்கு 102 முதல் 114 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும் போது திமுக கூட்டணி ஒரு சதவீத வாக்கை இழந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்குகள் அதிகரித்திருப்பதாகவும் சி.என்.என்.-ஐ.பி.என். தெரிவித்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கணிப்பில், திமுக கூட்டணி 115- 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 105- 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிவிஜி நியூஸ்- சி வோட்டர் இணைந்து நடத்திய கணிப்பில், தமிழகத்தில் 234 பேரவை தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்கு வங்கி குறைந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காங்.கூட்டணி ஆட்சி?
140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப் பேரவையில், ஆளும் இடதுசாரி முன்னணிக்கு 69- 77, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 63- 71 இடங்களும் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் கூறப்பட்டுள்ளது.  ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 85-92 இடங்களிலும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49- 57 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 83 முதல் 91 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49 முதல் 57 இடங்களையும் கைப்பற்றக் கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 72 முதல் 82 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும் என ஏசியா நெட் தொலைக்காட்சி சேனல் நடத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது. முதல்வர் பதவிக்கு தகுதியானவர் அச்சுதானந்தன் என 40 சதவீதம் பேரும், காங்கிரஸின் உம்மன்சாண்டி என 37 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்காளத்தில் முடிவுக்கு வருமா 34 ஆண்டுகால இடதுசாரி ஆட்சி?
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 222- 234 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்றும், இடதுசாரி முன்னணிக்கு 60- 72 இடங்கள் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு 210-220 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 65- 70 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 184 முதல் 192 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 56 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமில் கூட்டணி ஆட்சி?
அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 64- 72 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் கண பரிஷத் 16 முதல் 22 இடங்களும், எ.யு.டி.எஃப் 11 முதல் 17 இடங்களும், பா.ஜ.க 11 இடங்களும் கைப்பற்றும் என அக்கணிப்பு கூறுகிறது.
ஆனால், அஸ்ஸாம் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது. ஆளும் காங்கிரசுக்கு 41 முதல் 45 இடங்களும், பாஜகவுக்கு 14 முதல் 18 இடங்களும், அஸ்ஸாம் கண பரிஷத் கட்சிக்கு 31 முதல் 35 இடங்களும் கிடைக்கக்கூடும்.
இதனால், ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கணிப்பின்படி, காங்கிரஸ் 41- 47 இடங்களிலும், பாஜக 16- 18 இடங்களிலும், அஸ்ஸாம் கண பரிஷத் 13- 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
உண்மையான முடிவுகளுக்காக மே-13-ஆம் தேதி வரை காத்திருப்போம். 

Tuesday, 10 May 2011

உஸாமாவின் மரணமும் முடிவில்லாத மர்மங்களும்

osama
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். அதைப்போல் உஸாமா பின் லாடன் இருக்கும் போதும் பத்திரிகைகளுக்கு நல்ல வியாபாரத்தை வழங்கினார். இறந்ததாக கூறப்பட்ட பின்னரும் வழங்கி கொண்டிருக்கிறார்.
உலகில் இவர் அளவிற்கு குறுகிய காலத்தில் எந்த மனிதனும் இந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்பட்டிருப்பானா என்பது சந்தேகமே. அவரது மனைவிகளின் எண்ணிக்கையில் இருந்து மரணம் வரை பெரும்பாலும் அனைத்துமே ஊகம் தான். இவரை கதாபாத்திரமாக கொண்டு வடிக்கப்பட்ட கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் எவ்வித குறைவும் கிடையாது.
1979 முதல் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் நடைபெற்ற ஆப்கான்-சோவியத் ரஷ்யா போரில் உஸாமா பங்கு பெற்றதாகவும் அதில் அவர் அமெரிக்காவின் உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டதாகவும் பெரும்பான்மையினர் கூறுவதுண்டு. ஆனால் இச்செய்திகள் எல்லாம் வெளிவர ஆரம்பித்தது அந்த போர் முடிந்து ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு பின்னர்தான்! இப்போரை குறித்து எழுதிய பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் உஸாமாவின் பெயரை காண்பது மிகவும் அரிது.
அடுத்து உஸாமாவை உலகின் மிகப்பெரும் தீவிரவாதியாக மாற்றிய செப்டம்பர் 11 தாக்குதல்கள். இத்தாக்குதல்கள் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு இதுவரை உறுப்படியான பதில் எதுவும் இல்லை. ஆனால் இத்தாக்குதலை காரணமாக வைத்து இலட்சக்கணக்கான அப்பாவிகளை ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப்படைகள் கொன்று குவித்தன. உஸாமாவை சிறிது நாட்கள் மறந்த இவர்கள் ஈராக் அதிபர் சதாம் ஹூஸைனை தூக்கிலிட்டனர். இதற்கிடையே உஸாமா இறந்துவிட்டதாக பலமுறை செய்திகள் வெயியாகின.
குறுகிய காலத்தில் பரபரப்பான உஸாமாவின் பெயரை பலரும் மறந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். அவ்வப்போது சில சமயம் வீடியோக்கள் மூலம் காட்சி தருவார் உஸாமா. 2004ஆம் வெளிவந்த வீடியோவில் முதியவராக தோற்றமளித்த உஸாமா 2007ஆம் ஆண்டு வீடியோவில் மிகவும் இளமையாக காட்சி தருவார்!
மே 2 அன்று உஸாமா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கு முன்னர் பல முறை உஸாமா மரணம் அடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இம்முறை அமெரிக்க அதிபரே செய்தியை அறிவித்ததால் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். உஸாமாவின் புதிரான வாழ்க்கையில் அவரின் மரணமும் புதிராகவே உள்ளது.
2001 ஆம் ஆண்டிலேயே அவரின் சிறுநீரகங்கள் செயல் இழந்ததாகவும் அவருக்கு டயாலஸீஸ் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. சர்க்கரை நோய் உள்ளிட்ட பிற நோய்களும் அவருக்கு உண்டு. இவ்வளவு நோய்களை வைத்து கொண்டு அவர் எப்படி மலைகளில் உயிர் வாழ்ந்தார்? அதுவும் டயாலஸீஸ் செய்து கொண்டு? அவர் மலைகளில் எல்லாம் வாழவில்லை. நம்மை விட வசதியாக பாகிஸ்தானில் வாழந்து வந்தார் என்று தற்போது கூறுகின்றனர்.
அதுவும் ஒன்றிரண்டு மாதங்கள் அல்ல, ஆறு வருடங்கள் அங்குதான் இருந்தாராம். அதுவும் எங்கே? பாகிஸ்தான் தலைநகருக்கு மிக அருகில், அதுவும் இராணுவ பயிற்சி முகாம் அருகில்! நம்ப முடிகிறதா?? காதில் பூவை சுத்தலாம், மொத்த கூடையையும் தூக்கி வைப்பது நியாயமா? மர்மங்கள் பல இருந்தாலும் இதில் பல படிப்பினைகளும் இருக்கின்றன.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த ஆரம்பித்த நாளில் இருந்து பாகிஸ்தான் உடனான அதன் உறவு மிகவும் நெருக்கமானது. வருடந்தோறும் பல பில்லியன் டாலர்களை உதவியாகவும் ஆயுதங்களாகவும் வழங்கியது அமெரிக்கா. இதற்கு பிரதிபலனாக ஆப்கானிஸ்தானை மட்டுமல்ல தனது குடிமக்களை அமெரிக்கா கொலை செய்ததையும் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவின் உளவுத்துறையினர் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரிந்தனர்.
இதனிடையே சில மாதங்களுக்க முன் நடைபெற்ற ரேமண்ட் டேவிஸ் விவகாரம் இருவருக்கும் இடையில் இருந்த தேனிலவை பாதியில் முடித்து வைத்தது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளால் அதிர்ந்த அமெரிக்கா சரியான தருணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறையில் தனக்கு சாதகமானவர்களின் உதவியுடன் உஸாமா நாடகத்தை அமெரிக்கா நடத்தியதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இல்லையென்றால் சுதந்திரமான மற்றொரு நாட்டிற்குள் வந்து ஏறத்தாழ ஒரு மணிநேரம் சர்வ சாதாரணமாக இந்த நாடகத்தை நடத்தி விட்டு செல்ல முடியுமா? இத்துடன் நிறுத்திக் கொண்டதா அமெரிக்கா? இல்லை…தேவைப்பட்டால் இது போன்று இன்னும் தாக்குதல்களை பாகிஸ்தானில் நடத்துவோம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள்.
எங்களை பகைத்துக்கொண்டு உன்னால் எதுவும் செய்ய முடியாது, எங்களால் எதுவும் செய்ய முடியும் என்று பாகிஸ்தானிற்கு தெரிவிப்பதற்குதான் இந்த தாக்குதல் நாடகம். அமெரிக்காவுடன் உறவு கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு பாகிஸ்தான் நல்லதொரு உதாரணம். இந்த படிப்பினை பாகிஸ்தானிற்கு மட்டுமல்ல..நமக்கும்தான்.
ஏர்வை ரியாஸ்

பாப்ரி மஸ்ஜித்:அலகபாத் நீதிமன்றத்தீர்ப்பிற்கு தடைவிதித்த உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பெரும் ஆதரவு

ayodhya_verdict
புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த பாகப்பிரிவினை தீர்ப்பிற்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முஸ்லிம் அமைப்புகள், வரலாற்றாய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
வரலாற்று உண்மைகளையும், சொத்துரிமை ஆவணங்களையும் பரிசோதிக்காமல் பெரும்பான்மை நம்பிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கீழ் நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது மகிழ்ச்சி அளிப்பதாக முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கீழ் இயங்கும் பாப்ரி மஸ்ஜித் கமிட்டியின் கன்வீனர் டாக்டர்.எஸ்.க்யூ.ஆர்.இல்லியாஸ் தெரிவித்துள்ளார்.
மஸ்ஜிதின் மீது தங்களுடைய உரிமையை நிரூபிக்கும் ஏராளமான ஆவணங்களை சமர்ப்பித்த போதும் அவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பை வெளியிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என இல்லியாஸ் சுட்டிக்காட்டினார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு விந்தையானதும், வினோதமானதுமாகும் என உச்ச நீதிமன்றத்தின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது என அனுபம் கேர், டாக்டர்.கெ.எம்.ஸ்ரீமதி, மகேஷ் பட், டாக்டர்.கே.என்.பணிக்கர், பேராசிரியர் ரூபரேக வர்மா, ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மதசார்பற்ற சக்திகளுக்கு ஆசுவாசத்தை தரும் உத்தரவு என மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உச்சநீதிமன்ற தீர்ப்பைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் முத்துப்பேட்டை மாணவி சாதனை



TUESDAY, MAY 10, 2011

 நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தாவரவியல் பாடத்தில் மாநிலத்தில் முதல் இரண்டு இடங்களையும் முஸ்லிம் மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரஹ்மத் அறக்கட்டளை நடத்தும் ரஹ்மத் மெட்ரி்க்  மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி அய்னுல் மர்லியா தாவரவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அப்பாடப்பிரிவில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றுள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் மொத்த மதிப்பென்னில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

முத்துப்பேட்டை ஜும்ஆ மஸ்ஜித் கட்டிட பணிக்கு உதவிடுவீர்



FRIDAY, MAY 10, 2011

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ மஸ்ஜிதின் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நிதி  பற்றாக்  குறையின்  காரணமாக   வேலைகள் மிகவும் மெதுவாகவே நடந்துகொண்டிருக்கின்றன ஆகையால் தாங்களால் இயன்ற அளவு இந்த அல்லாஹ்வின் மஸ்ஜிதுக்கு உங்கள் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் சந்ததியினருக்கு அருள் பாக்கியம் வழங்குவானாக..!

பள்ளிவாசல் கட்டிட வேலைகளை பார்க்க..
 


 தொடர்புக்கு :

BANK:         I C I C I   BANK  

BRANCH:    MUTHUPET 

NAME:         AHAMED JALALUDEEN

A/C NO:       M.J.T.2   6092010 22473

CONTACT:  +91 7598538495
                         +91 9965418801


அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என்று நபி (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள். 
நூல் : புகாரி-450
அறிவிப்பு : உபைதுல்லாஹ் அல் கவ்லானி (ரலி)

'ஸ்கைப்' ஐ வாங்குகிறது மைக்ரோசோஃப்ட் 8.5 பில்லியன் USD க்கு உடன்படிக்கை..!


'ஸ்கைப்' ஐ வாங்குகிறது மைக்ரோசோஃப்ட் 8.5 பில்லியன் USD க்கு உடன்படிக்கை..!

TUESDAY, MAY 10, 2011

பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் கடும் போட்டிக்கு மத்தியில், 'ஸ்கைப்' சேவையை மைக்ரோசோஃப்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதிக்கு ஸ்கைப் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், கடந்த 36 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வர்த்தக உடன்பாடாக இது அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மைக்ரோசோஃப்ட்டின், விண்டோஸ் லைவ் மெசேஞ்சரில் ஏற்கனவே வீடியோ சேட்டிங் சேவை காணப்படுகிற போதும் விண்டோஸ் ஃபோன் 7 தொலைபேசி சாஃப்வேருடன் இணைந்து இயங்காது. இதனால் மைக்ரோசோப்ஃட் இற்கு உடனடியாக வீடியோ கோல் வசதியுடன் கூட ஓர் சாஃப்ட்வேர் தேவைப்பட்டது.
இந்நிலையில், ஐபோன், ஐபேட் என அனைத்திலும் இயங்ககூடிய ஸ்கைப் சேவையை விலைகொடுத்து வாங்குவதன் முலம் தனது விண்டோஸ் ஃபோன் 7 ற்கு ஏற்றால் போல் அதன் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவுள்ளது.

லுக்ஸம்பேர்க்கை தலைமையகமாக கொண்ட ஸ்கைப் நிறுவனம் சுமார் 663 மில்லியன் குளோபல் பயணாளர்களை கொண்டுள்ளது. 2006ம் ஆண்டு eBay நிறுவனம், ஸ்கைப்பின் பங்குகளை 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கிக்கொண்டதுடன், 2009ம் ஆண்டு அதன் 70% வீத பங்குகளை விற்றது. 

கடந்த 2010 ஆகஸ்ட்டில் மேலதிமகாம புதிய பங்குகளை விற்கும் திட்டத்தை அறிவித்தது. இதையடுத்தே இக்கொடுக்கல் வாங்கலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளத்தொடங்கப்பட்டன. ஆன்லைன் வழியே Video, Audio Calling செய்வதற்கு உலகின் மிகச்சிறந்த சாஃப்ட் வேராக ஸ்கைப் திகழ்கிறது.